வாக்குச் சீட்டில் ஓட்டுப்போடும்போது சில ஓட்டுகள் செல்லாதவை என்று அறிவிக்கப்படும். அப்போது, குறைந்த ஓட்டில் ஒருவர் வெற்றி பெறும்போது, தனக்கு விழுந்த ஓட்டுக்களை செல்லாத ஓட்டுக்களாக அறிவித்து விட்டதாக குற்றச்சாட்டுகள் எழும். மறுவாக்கு எண்ணிக்கையும் கேட்பார்கள். ஆனால், 99 சதவீதம் பிரச்னை இல்லாமல், குற்றச்சாட்டுகள் இல்லாமல் முடிந்து விடும். அதன்பின்னர் ஓட்டு மிஷின் கொண்டு வரப்பட்ட பிறகு, அதில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், அந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் மறுத்து வந்தது.
கடந்த சில தேர்தல்களில் குறிப்பாக பாஜ பதவி ஏற்ற பிறகு, ஓட்டு இயந்திரங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் அதிகரிக்க தொடங்கியது. ஏனெனில், பாஜ தலைவர்கள் அல்லது மத்திய அமைச்சர்கள் தேர்தல் முடிவு குறித்து எதேச்சையாக கூறும் இடங்களில்தான் அவர்கள் வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியாகிறது. இதுதான் பல கட்சிகளை சேர்ந்த தலைவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்பின்னர் வாக்குப்பதிவு நாள் அன்று, எந்த பட்டனை அழுத்தினாலும், அது தாமரை அல்லது அதன் கூட்டணி கட்சிகளின் சின்னத்துக்கே விழுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. பின்னர் அந்த குறைபாடுகள் சரி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், இதுபோன்ற குற்றச்சாட்டுகள், எதிர்க்கட்சிகளின் சின்னங்களுக்கு விழுந்ததாக இதுவரை எங்கும் வரவில்லை. இதுதான் மேலும் மர்மத்தை உருவாக்கி வந்தது.
இப்போது, அடுத்தகட்டமாக வாக்குப்பதிவு செய்யும் நேரத்தில் அருகில் உள்ள விவி பேட் இயந்திரத்தில் யாருக்கு ஓட்டுப்போட்டோம் என்பதை பார்க்க வசதி உள்ளது. இதனால் பல எதிர்க்கட்சிகள் நிம்மதியடைந்தாலும், புதிய வகையில் அதாவது ஓட்டு இயந்திரத்தையே மாற்றுவது அல்லது ஓட்டு இயந்திரத்தை அப்படியே ஹேக்கிங் செய்வது (ஊடுருவி தகவல் திருடுவது) போன்றவற்றில் ஆளும் கட்சிகள் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால், தமிழகத்தில் ஆளும் கட்சியின் தில்லு முல்லு பலிக்காது என்று எல்லோரும் கூறி வந்த நிலையில், தேர்தல் நாள் முதல், இன்றுவரை நடந்து வரும் சம்பவங்கள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அச்சத்தை எதிர்க்கட்சிகளுக்கு ஏற்படுத்தி உள்ளது. அதை போக்க வேண்டிய தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் உள்ளது. இது கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக வேட்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் கடந்த 6ம் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலிலும் பல இடங்களில் எந்த பட்டனை அழுத்தினாலும், தாமரைக்கும், இரட்டை இலைக்கும் விழுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பின்னர் அந்த இயந்திரங்கள் சரி செய்யப்பட்டன. அதன்பின் அமைதியாக தேர்தல் நடந்து முடிந்து விட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் ஆணையம் அறிவிக்கும் நேரத்தில்தான், வேளச்சேரியில் 2 மோட்டார் சைக்களில் 2 பேர் 3 ஓட்டு இயந்திரத்தையும், ஒரு விவிபேட் இயந்திரத்தையும் எடுத்துச் சென்றதை பொதுமக்கள் பார்த்து மடக்கிப் பிடித்தனர். பொதுமக்களிடம் இருந்து 2 பேரையும் மீட்ட போலீசார், ஓட்டு இயந்திரத்தையும் காவல்நிலையம் எடுத்துச் சென்றனர். பின்னர் அது காலி மிஷின். ஒரு மிஷின் பழுதானாலும், மாற்றுவதற்காக தயாராக வைக்கப்பட்டிருந்தது என்று தெரிவித்தனர். ஆனால் அதை பாதுகாப்பாகத்தானே எடுத்துச் செல்லவேண்டும். ஸ்கூட்டரில் எப்படி எடுத்துச் செல்ல அனுமதி அளித்தீர்கள் என்றபோது அதிகாரிகளால் பதில் சொல்ல முடியவில்லை. இப்போது விவிபேடில் 15 ஓட்டுக்கள் இருந்ததாக கூறி, ஒரு பூத்துக்கு மட்டும் அதிலும் ஆண்கள் பூத்துக்கு மட்டும் மறு தேர்தலை தேர்தல் ஆணையம் இன்று நடத்துகிறது.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேநேரத்தில் துறைமுகத்திலும், வேளச்சேரியில் மற்றொரு இடத்திலும் இதுபோல பாதுகாப்பு இல்லாமல், மிஷினை எடுக்க வந்த லாரியை பொதுமக்கள் விரட்டியடித்தனர். தேர்தலில் வெற்றி பெற ஆளும் மத்திய, மாநில அரசுகள் என்ன வேண்டுமானாலும் செய்யும் என்று மக்களே சந்தேகம் கொள்ள ஆரம்பித்தனர். இதனால் கட்சித் தொண்டர்கள் விழிப்புடன் இருந்து ஓட்டு மிஷின்களை வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு சென்று, சீல் வைக்கும் வரை உடன் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டனர். வேளச்சேரியில் களேபரங்கள் நடந்து கொண்டிருந்த நேரத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் மற்றொரு சம்பவம் நடந்தது. 6ம் தேதி இரவு தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் 5 கன்டெய்னர் லாரிகள், ‘‘தேர்தல் அவசரம், ேதர்தல் பணி’’ என்ற வாசகம், ஸ்டிக்கர் இல்லாமல் திடீரென வந்தது கண்டு அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த திமுகவினர் அதிர்ச்சியடைந்தனர். அந்த லாரிகளை சிறைபிடித்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அந்த லாரிகளுக்கு முறையான ஆவணங்கள் இல்லை என்பதை திமுகவினர் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரான தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘5 லாரிகளில் கொண்டு வரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்குப்பதிவு மையங்களில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானால் மாற்றுவதற்கும், அதுபோல் வாக்குப்பதிவு மையங்களில் பழுதான வாக்குப்பதிவு இயந்திரங்களும் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் குடோனுக்கு அனுப்புவதற்காக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார். மேலும், இந்த இயந்திரங்கள் புதுக்கோட்டைக்கு கொண்டு செல்ல இருப்பதாக தெரிவித்தனர். புதுக்கோட்டை செல்ல வேண்டும் என்றால், ஏன் வாக்கு எண்ணும் மையத்திற்கு இந்த கன்டெய்னர் வந்தது என்றபோது அதிகாரிகளால் பதில் சொல்ல முடியவில்லை. ஆனாலும், அதிகாரிகளின் வாக்குறுதிகளை ஏற்றுக் கொண்டு, போராட்டத்தை திமுகவினர் கைவிட்டனர். எனினும் வாக்குப்பதிவான இயந்திரங்களை மாற்ற கொண்டு வந்திருக்கலாமோ என்ற சந்தேகம் இதுவரை நீடிக்கிறது. இந்தச் சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தின.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, அம்பை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான நெல்லை அரசு ெபாறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு 156 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இங்கு கடந்த 8ம் தேதி மதியம் 1.44 மணி அளவிலும், மாலை 6.20 மணி அளவிலும் மின்தடை ஏற்பட்டு கேமரா செயல்படாத நிலை ஏற்பட்டது. மேலும் 12ம் தேதி பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி கேமரா எண்.6 செயல்படாமல் இருந்துள்ளது. இது பற்றி திமுகவினர் புகார் செய்த பின்னரும் அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை தொகுதிகளின் கேமராக்கள் தெளிவில்லாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 7 தொகுதிகளின் வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்துக்கு நள்ளிரவு 4 கண்டெய்னர் லாரிகள் வந்தன. பாதுகாப்பு நலன்கருதி ஆட்சியர், எஸ்.பி. வீடு மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் குடோன் அருகாமையில் இந்த நான்கு கண்டெய்னர் லாரிகளும் நிறுத்தப்பட்டன. அதனை சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, வெளியாட்கள் யாரும் நெருங்கவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதுகுறித்து, அதிகாரிகளிடம் கேட்டபோது, மேற்கு வங்கத்திலிருந்து செல்லாத நாணயங்களை ஏற்றிக்கொண்டு, சேலம் உருக்கு ஆலைக்கு சென்றதாகவும், நள்ளிரவு நேரம் என்பதால் பாதுகாப்பு நலன் கருதி இங்கு கொண்டு வரப்பட்டு நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர். இந்த தகவலும், படமும் சமூகவலைதளங்களில் இரவே பரவிக்கொண்டிருக்க, அதிகாலையில் நான்கு கண்டெய்னர் லாரிகளும் புறப்பட்டுச்சென்றது. விழுப்புரத்தில் பாஜக ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. அதேபோல், அதிமுகவில் அமைச்சர் சண்முகம் போட்டியிடுகின்றார்.
எனவே, தேர்தல்முடிவை மாற்றுவதற்காக பெரும் சதி நடப்பதாக, தவாக வேல்முருகன் சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் நேற்று 100க்கும் மேற்பட்ட கல்லூரி ஊழியர்கள் இணையதள வகுப்பு எடுப்பது சம்பந்தமாக கல்லூரிக்கு வந்தனர். இதில் ஒரு சிலர் அடையாள அட்டை இல்லாமல் வந்ததால் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அப்போது அங்கிருந்த திமுகவினர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருக்கும்போது, ஆன்லைன் வகுப்பு எடுப்பதாக கூறி ஊழியர்களை ஏன் அனுமதிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.
கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தளவாய்பாளையத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் கண்காணிப்பு கேமரா முழுமையாக இயங்கவில்லை என திமுகவினர் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். சேலம் மேற்கு தொகுதி ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் மொத்தம் 16 பூத்கள் அமைக்கப்பட்டிருந்தது. அதில், 4 பூத்களில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மட்டும், வாக்குப்பதிவு நேரம் முடிந்த பின்பு இரவு 7 மணிக்கு முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. மீதியுள்ள 12 பூத்துகளில் வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்படவில்லை. மண்டல அலுவலர் சக்ரவர்த்தி வந்த பின்னரே, அந்த பெட்டிகளுக்கு சீல் வைக்கப்படும் என வாக்குச்சாவடி அலுவலர்கள் தெரிவித்தனர்.
அடுத்த அரை மணி நேரத்தில், ஒரு தனியார் கால் டாக்சியில் 12 வாக்கு இயந்திரங்களுடன் மண்டல அலுவலர் சக்ரவர்த்தி உள்ளே வந்தார். அப்போது, திமுக வேட்பாளரின் முகவர்கள் வாக்குப்பதிவு முடிந்த பின்பு, சீல் வைக்கப்படாத வேறு இயந்திரங்களுடன் எதற்காக வந்துள்ளீர்கள்? தேர்தல் ஆணைய உத்தரவின்படி, இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன், இங்குள்ள இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டிருக்க வேண்டும். அதனை ஏன் தடுத்தீர்கள்? அப்படி என்றால் இந்த வாக்கு இயந்திரத்திற்கு பதிலாக நீங்கள் கொண்டு வந்த வாக்கு இயந்திரங்களை மாற்ற திட்டமிட்டுள்ளீர்களா? என கேள்வி எழுப்பினர். இந்த வாக்குச்சாவடிகளில் இருந்த வெப் கேமராக்களை 6.30 மணிக்ேக அகற்றி விட்டனர். இதுவும் வாக்குப்பெட்டியை மாற்றி வைப்பதற்கான திட்டம்தான்’’ என்று பரபரப்பு புகார் தெரிவித்தனர். இந்த புகார்கள் எதற்கும் விளக்கம் அளிக்காத அதிகாரிகள், நள்ளிரவு 1 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைத்து, வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழிற்நுட்ப கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த 13-ம்தேதி இரவு 9.30 மணியளவில் இரண்டு கண்டெய்னர் லாரிகள் புகுந்தன. இதையறிந்த, கோவை சிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திக், கோவை தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் உள்ளிட்டோர் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் ஒன்று திரண்டனர். கண்டெய்னர் லாரிகளை இரவு நேரத்தில் கொண்டு வந்தது ஏன்? இவற்றை உள்ளே கொண்டு வர, அதிகாரம் கொடுத்தது யார்? என விளக்கம் கேட்டனர்.
இதற்கிடையில், அங்கு, போலீஸ் உயர் அதிகாரிகளும் வந்தனர். இரு கண்டெய்னர் லாரிகளையும் பார்வையிட, வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு, போலீஸ் அதிகாரிகள் அனுமதி அளித்தனர். உள்ளே ஏறிச்சென்று பார்த்தபோது, அது, மொபைல் டாய்லெட் வாகனம் என ெதரியவந்தது. இக்கல்லூரி வளாகத்தில் பெண் போலீசாருக்கு தேவையான டாய்லெட் வசதி இருக்கும்போது ஏன் கொண்டு வந்தனர் என்பது மர்மமாகவே உள்ளது. ராமநாதபுரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் லேப்டாப்களுடன் அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் நேற்று முன்தினம் காலை உள்ளே நுழைய முயன்றனர். இதுகுறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள திமுக முகவர்கள், தேர்தல் அலுவலரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து லேப்டாப்களுடன் வந்த பேராசிரியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கொடுவிலார்பட்டியில் உள்ள தேனி கம்மவார் சங்க கல்வி மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக நள்ளிரவு நேரங்களில் அடிக்கடி மின் விநியோகம் தடைபடுகிறது. இதனால் வாக்கு எண்ணும் மையம் இருள் சூழ்ந்துள்ளது. மேலும், மையத்தில் சிசிடிவி கேமராக்களில் ஒளிபரப்பும் அடிக்கடி தடைபடுகிறது. அடிக்கடி கரண்ட் கட், சிசிடிவி கேமராவில் ஒளிப்பதிவு நிறுத்தம் போன்றவற்றால் முறைகேடுகள் நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்துள்ளது. இவ்வாறு மாநிலம் முழுவதுமே பல்வேறு மர்மமான நடவடிக்கைகள் வாக்கு எண்ணும் மையங்களில் நடந்து வருகிறது. இது பெரிய அளவில் சந்தேகத்தை எல்லோருக்கும் ஏற்படுத்தியுள்ளது. விழிப்புடன் இருக்கும் தமிழகத்திலலேய இவ்வளவு அக்கப்போர் நடக்கிறது. முன்னேறாத மாநிலங்களான மேற்கு வங்கம் உள்ளிட்ட வட மாநிலை கேள்விக்குறிதான் என்கின்றனர் தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள்.
கடந்த மக்களவை தேர்தலின்போது தேனியில் இதுபோல ஓட்டு மிஷின்கள் மர்மான முறையில் தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டன. இது தெரிந்ததும் திமுகவினர் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது ஊட்டியில் இருந்து எடுத்து வந்ததாக தெரிவித்த அதிகாரிகள், வேறு மாவட்டத்துக்குப்பதில் தெரியாமல் இங்கு வந்ததாக தெரிவித்தனர். இதனால் கடந்த தேர்தலிலேயே ஓட்டு மிஷின்களை மாற்ற முயற்சி நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இப்போது அது எல்லா இடங்களிலும் நடப்பது மேலும் சந்தேகத்தை வலுவாக்கியுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் முடிந்து ஒரு மாதம் வரை ஓட்டு மிஷின்கள் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ளன. கேட்டதால், மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தல் முடிந்த பிறகுதான் மற்ற மாநிலங்களில் வாக்குகளை எண்ண முடியும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அப்படி என்றால், ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் ஏன் மேற்கு வங்கத்தில் 8 கட்டம் நடைபெறும் நாளில் இந்த தேர்தலையும் நடத்தியிருந்தால் ஒரு மாதம் பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்காதே என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் நினைக்கவில்லை. இந்த ஒரு மாத கால தாமதம்தான் தமிழக மக்களை பெரிய அளவில் சந்தேகம் கொள்ள வைத்துள்ளது. நடக்கும் சம்பவங்களும் அதை உறுதிப்படுத்துவதுபோலத்தான் உள்ளது. இதை தீர்த்து வைப்பது தேர்தல் ஆணையத்தின் தலையாய கடமையாகும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
திருவள்ளூரில் நவீன கன்டெய்னர்
திருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான இயந்திரங்கள் வேப்பம்பட்டு தனியார் கல்வி குழும வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறையின் அருகே, 13ம் தேதி இரவு கன்டெய்னர் லாரி வந்துள்ளது. இந்த பாதுகாப்பு அறைகளுக்கு எதிரே ஆசிரியர்கள் ஆன்லைன் வகுப்புகளும் நடத்தி வருகின்றனர். பொதுவாக, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு 100 மீட்டர் வரையில் யாரும் வரக்கூடாது என்பது விதிமுறை. ஆனால், இதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வகுப்புக்கு அனுமதி அளித்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் சரியாக இயங்காதது, அறையின் பின்புற பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக திமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
தேர்தல் அவசரம், தேர்தல் பணி’’ என்ற வாசகம், ஸ்டிக்கர் இல்லாமல் திடீரென வந்தது கண்டு அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த திமுகவினர் அதிர்ச்சியடைந்தனர். அந்த லாரிகளை சிறைபிடித்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அந்த லாரிகளுக்கு முறையான ஆவணங்கள் இல்லை என்பதை திமுகவினர் கண்டுபிடித்தனர்.
