பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையம் செல்லாது: உயர் நீதிமன்றத்தில் சூரப்பா தரப்பு வாதம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து பணிஓய்வு பெற்றுவிட்டதால், தன்னை பணி நீக்கம் செய்யும் நோக்கில் விசாரணை ஆணையம் அமைத்தது செல்லத்தக்கதல்ல என்று முன்னாள் துணைவேந்தர் சூரப்பா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.  சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிராக கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு 2020 நவம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், விசாரணை ஆணையத்துக்கு தடை கோரியும், சூரப்பா  வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து விசாரணை ஆணையம், அறிக்கை அளித்தாலும், அதன் மீது அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்று நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார்.

 இந்த வழக்கு நேற்று நீதிபதி கோவிந்தராஜ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சூரப்பா தரப்பில் தன்னை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்ற காரணத்திற்காகவே விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது தான் ஓய்வுபெற்றுவிட்டதால், விசாரணை ஆணையம் செல்லத்தக்கதல்ல என்று வாதிடப்பட்டது.  அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி வாதிட இருப்பதால் வழக்கை மற்றொரு தேதிக்கு தள்ளிவைக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது. நீதிபதி கலையரசன் ஆணையத்தின் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாலும், அதன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை கூடாது என்று இடைக்கால உத்தரவு உள்ளதாலும் வழக்கை ஒத்திவைக்க வேண்டுமென்றும் அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.  இதனை ஏற்ற நீதிபதி கோவிந்தராஜ், இடைக்கால உத்தரவை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நீட்டித்து வழக்கை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்தார்.

Related Stories: