ஊசி மருந்துகள் தட்டுப்பாடு எதிரொலி: குமரியில் கொரோனா தடுப்பூசி மையங்கள் மூடல்...மருத்துவமனைகளில் குவிந்த பொதுமக்கள் ஏமாற்றம்

நாகர்கோவில்: குமரி  மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைகளுக்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள். கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அம்மா மினி கிளினிக்குகள் என மாவட்டம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கி உள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் மையங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான்  தடுப்பூசி போடப்படுகிறது. கடந்த சில நாட்களாக தடுப்பூசி போட பொதுமக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதால், தடுப்பூசி  மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளது. ஆனால் தற்போது மாவட்டத்தின் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் டோக்கன் முறையில், தடுப்பூசி போடப்படுகிறது.

ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று தடுப்பூசி போடுவதற்கு மக்கள் அதிகளவு வந்திருந்தனர். டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. ஆனால் 200 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிலையில் இன்றும் தடுப்பூசி போட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மக்கள் திரண்டனர். கோவாக்சின் தீர்ந்ததால், மருத்துவகல்லூரியில் கோவாக்சின் ஊசி போடப்பட்டு வந்த தடுப்பூசி மையம் மூடப்பட்டது. கோவி ஷீல்டு தடுப்பூசி போடும் பணி நடந்தது. 200 தடுப்பூசிகள் மட்டுமே இருந்ததால், டோக்கன் கொடுக்கப்பட்டது. டோக்கன் பெறாதவர்களை திருப்பி அனுப்பினர்.

நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தடுப்பூசி இல்லை. ஏராளமானவர்கள் தடுப்பூசி போட வந்து ஏமாற்றத்துடன் சென்றனர். இதற்கிடையே முதற்கட்ட தடுப்பூசி போட்டவர்கள் 28 வது நாள் வர வேண்டும் என அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கும் தடுப்பூசி இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே நிலைமையை எப்படி சமாளிக்க முடியும் என அதிகாரிகள் திணறி வருகிறார்கள்.

ஆனால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் ரூ.250க்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதனால் பலர் தனியார் மருத்துவமனைகளில் குவிந்து வருகிறார்கள். தடுப்பூசி இல்லாத நிலை மாவட்டத்தில் பதற்றமான நிலையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து உடனடியாக கலெக்டர், தமிழக அரசிடம் பேசி நிலைமையை சமாளிக்க கூடுதல் தடுப்பூசிகளை பெற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் இது குறித்து கேட்ட போது , குமரி மாவட்டத்துக்கு 2 லட்சம் டோஸ்கள் கேட்கப்பட்டு உள்ளன. இன்னும் சில தினங்களில் இவை குமரி மாவட்டத்துக்கு வரும்.  எனவே மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை என்றனர்.

Related Stories: