கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி வேண்டும்: மத்திய அரசுக்கு தலைமை செயலாளர் கடிதம்

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக தலைமை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அனைத்து மாநில முதல்வர்களுடன் கடந்த 8ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய பிரதமர், கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் கோவிட் தடுப்பூசி முக்கிய இடம்பெறுவதால் ஏப்ரல் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை அனைத்து மாநிலங்களில் தடுப்பூசி திருவிழா நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தார். அதன்படி, தமிழகத்தில் 14ம் தேதி முதல் 3 நாட்களுக்கு தடுப்பூசி திருவிழா நடந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக 1.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் அந்த எண்ணிக்கையை 2 லட்சமாக உயர்த்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், நகர்புற மற்றும் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட 1900 மினி கிளினிக்குகள், தடுப்பூசி செலுத்த அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனைகள் என 4328 மையங்களில் கோவிட் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. இதில் 3797 மையங்களில் கோவிட் ஷீல்டு தடுப்பூசியும, மற்ற மையங்களில் கோவாக்சின் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. ஜனவரி 16ம் தேதி முதல் தற்போது வரை 76 நாட்களில் 1 கோடியே 39 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

ஆனால் தற்போது வரை 6,78,532 சுகாதார பணியாளர்கள், 6,56,393 முன் களப்பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 12,49,979 பேர், 45 முதல் 60 வயதுக்குட்பட்டோரில் 11,47,961 பேர் என மொத்தம் 37,32,865 பேர் மட்டுமே தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை இன்னும் மக்கள் மத்தியில் வேகமாக கொண்டு செல்லும் முயற்சியாகவே நாட்கள் கோவிட் தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி போடப்பட உள்ளது. ஆனாலும் தமிழகத்தில் போதிய அளவில் தடுப்பூசி இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் கூடுதலாக 15 லட்சம் கோவிஷீல்டும், 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசி மருந்தும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories: