நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரிப்பு சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து: 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு; மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரு நாள் மட்டும் 1.84 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்துவது தொடர்பான உயர்மட்ட ஆலோசனை கூட்டம் பிரதமர் தலைமையில் டெல்லியில் நடந்தது. அதில் எடுத்த முடிவின்படி, சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரு நாள் பாதிப்பானது 1.84 லட்சத்தை கடந்தது. இது பெற்றோர், மாணவர்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு எழுதுவதற்காக 21.5 லட்சம் மாணவ-மாணவிகள் பதிவு செய்திருந்தனர். இதேபோல் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுக்காக 14 லட்சம் மாணவர்களும் பதிவு செய்து இருந்தனர்.  இவர்களுக்கான தேர்வுகள் மே மாதம் முதல் ஜூன் மாதம் வரை நடக்கும் என்று சிபிஎஸ்இ அறிவித்து இருந்தது. இந்நிலையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், தேர்வு மையத்துக்கு மாணவர்கள் நேரடியாக வந்து தேர்வு எழுதினால் கொரோனா தொற்றும் அபாயம் இருக்கிறது என்றும் அதனால் சிபிஎஸ்இ  தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என சில மாநில அரசுகளும், பல்வேறு அரசியல் தலைவர்களும் மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர்.

மேலும், சிபிஎஸ்இ மாணவர்கள் சுமார் ஒன்றரை லட்சம் பேர், தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஆன்லைன் மூலமாக நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தங்களது கையெழுத்திட்ட கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தியும் சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இது குறித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் எழுதினார். மேலும் இது தொடர்பாக நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில், ‘கடந்த சில நாட்களாக தேர்வுக்கு தயாராவதில் மாணவர்கள் மன அழுத்தத்தில் இருந்தனர். தற்போது கொரோனாவுக்கு எதிராக பாதுகாப்பு தேவை என்ற அழுத்தத்துக்கு ஆளாகி இருக்கின்றனர். தேர்வு பணியில் ஈடுபடும் ஊழியர்கள், மாணவர்களின் குடும்பத்துக்கும் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.

இந்தியாவின் எதிர்கால குரலை புறக்கணிக்காதீர்கள். சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்யுங்கள்’ என குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில், மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்ற உயர்மட்ட குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள சூழலில் சிபிஎஸ்இ தேர்வுகள் நடத்துவதில் உள்ள சிரமங்கள், எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கல்வி துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பத்தாம் வகுப்பிற்கான சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றது. புதிய மதிப்பீடு முறையின் அடிப்படையில் மாணவர்களுக்கான மதிப்பெண்கள் வழங்கப்படும். மதிப்பெண்ணில் திருப்தி இல்லாதவர்கள், நிலைமை சீரானவுடன் பள்ளிக்கு சென்று தேர்வு எழுதி மதிப்பெண் பெறலாம். மே 4ம் தேதி தொடங்க இருந்த சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றது. நாட்டில் நிலவும் சூழலின் அடிப்படையில் தேர்வு நடத்துவது குறித்து ஜூன் 1ம் தேதியன்று முடிவு செய்யப்படும்.  பின்னர் தேர்வு நடத்தும் தேவை ஏற்பட்டால், தேர்வு நடத்துவதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக மாணவர்களுக்கு அது குறித்து அறிவிக்கப்படும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

* தமிழகத்திலும் பிளஸ் 2 தேர்வு தள்ளிப்போகுமா?

தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருவதால் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர், சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும் மிகவும் முக்கியமான தேர்வு என்பதால் தமிழக அரசு பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு துவங்கும் என்று அறிவித்தது. மேலும் மே 3ம் தேதி நடக்க இருந்த மொழிப்பாட தேர்வை மட்டும் மே 31ம்  தேதிக்கு ஒத்திவைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் கொரோனா காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் ஒத்தி வைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, தமிழ் நாட்டிலும் அதேபோல பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வை மே மாதம் நடத்துவதை தவிர்த்து ஜூலை மாதம் நடத்த வேண்டும் என்று கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்கள் கருத்து தெரிவித்து தமிழக அரசுக்கு கோரிக்கையும் வைத்துள்ளனர். இதையடுத்து பள்ளிக் கல்வித்துறையின் சார்பில்  இன்று இந்த கோரிக்கை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. அதற்கு பிறகு  தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எப்போது நடக்கும் என்ற அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: