கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என பெயர் மாற்றம் சாலைக்கு வைத்த ஈ.வெ.ரா. பெயர் நீக்கம்: தமிழக அரசு திடீர் நடவடிக்கை

சென்னை: சென்னையில் சாலைக்கு வைத்துள்ள ஈ.வெ.ரா. என்ற பெயரை திடீரென தமிழக அரசு நீக்கி உள்ளது. மேலும், அந்த சாலைக்கு கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்று தமிழக அரசு திடீரென மாற்றியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சென்னையின் அடையாளமாக பல சாலைகளின் பெயர்கள் உள்ளன. அதாவது, கடற்கரை சாலைக்கு காமராஜர் சாலை என்றும், தலைமை செயலகம் எதிரே உள்ள சாலைக்கு ராஜாஜி என்றும் எல்ஐசி அமைந்துள்ள மவுண்ட் ரோடுக்கு அண்ணா சாலை என பல முக்கிய சாலைகளுக்கு தலைவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று, சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் பாலத்தில் இருந்து அமைந்தகரை வரை சுமார் 5.5 கிலோ மீட்டர் நீள சாலைக்கு, மறைந்த தலைவர் பெரியாரின் நினைவாக ஈ.வெ.ரா. சாலை என்று பெயர் சூட்டப்பட்டது. சென்னை மக்களும் ஈ.வெ.ரா. சாலை என்றே கூறி வந்தனர்.இந்நிலையில் தற்போது ஈ.வெ.ரா. சாலையை தமிழக அரசு இருட்டடிப்பு செய்யும் வகையில் `கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு’ (Grand Western Trunk Road) என்று குறிக்கும் வகையில் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே போர்டு வைக்கப்பட்டுள்ளது. அந்த போர்டில் ஈ.வெ.ரா. சாலை என்ற பெயர் எதிலும் இடம்பெறவில்லை.

இதேபோன்று சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பல இடங்களில் இந்த பலகை வைக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை, சென்னை பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையை மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த துறை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் மாநில நெடுஞ்சாலை துறை இணையத்திலும் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என்பதற்கு பதிலாக கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories: