தவில், நாதஸ்வரம், தெருக்கூத்து, தாளம் உள்ளிட்ட 6,810 நாட்டுப்புற கலைஞர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிவாரணம்: அரசாணை வெளியீடு

சென்னை: நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் புதியதாக பதிவு செய்துள்ள தவில், நாதஸ்வரம் மற்றும் தெருக்கூத்து உள்ளிட்ட கலைஞர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் சிறப்பு நிவாரண நிதி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் புதிதாக கொரோனா காலகட்டத்தில் சேர்க்க வேண்டி தபால் வாயிலாகவும், நாட்டுப்புற கலைஞர்கள் சங்கம் வாயிலாகவும் அதிக அளவில் மண்டலங்களிலும், வாரிய தலைமை அலுவலகத்திலும் தீர்ப்புரை பெறப்பட்டுள்ளது.

அதன்படி 30.8.2020 நாளினை தீர்வுக்குரிய நாளாக கருதி, தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் புதிதாக பதிவு செய்திட சென்னை மற்றும் 7 மண்டல கலை பண்பாட்டு மைய அலுவலகங்களில் 30.8.2020 வரை தவில், நாதஸ்வரம், தெருக்கூத்து, தாளம் ஆகிய கலைஞர்களுக்கென 2,780 விண்ணப்பங்களும், இதே காலகட்டத்தில் மண்டலங்களில் இதர நாட்டுப்புற கலைஞர்களிடம் இருந்து 4,030 விண்ணப்பங்களும் என மொத்தம் 6,810 விண்ணப்பங்கள் பெற்றப்பட்டுள்ளது. இவை பரிசீலிக்கப்பட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தகுதியுள்ள 6,810 கலைஞர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் சிறப்பு நிவாரண நிதியுதவி வழங்க ஏதுவாக பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ஒரு கோடியே 36 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: