உர விலையை திரும்ப பெறாவிட்டால் போராட்டம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் துரைமாணிக்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டுமென்று கடந்த நான்கரை மாதங்களுக்கு மேல் டெல்லியில் விவசாயிகள் லட்சக்கணக்கில் திரண்டு போராடி வருகின்றனர். அதை கண்டுகொள்ளாத மத்திய அரசு உரங்களுக்கான மானியத்தை படிப்படியாக விலக்கிக் கொண்டு வருகிறது. அதனால் உரங்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது.

கடந்த மாதம் ரூ.1200க்கு விற்ற 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை டி.ஏ.பி. உரம் தற்போது ரூ.1900 ஆக விலை உயர்ந்துள்ளது. இதேபோல் 20.20 ரக காம்ப்ளக்ஸ் உரங்கள் ரூ.900 விற்றது. தற்போது அதன் விலை ரூ.1350 ஆக உயர்ந்துள்ளது. இப்படி பல ரக உரங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. உர விலை உயர்வினால் தானியங்களின் உற்பத்திச் செலவுகள் அதிகரிக்கும். எனவே, உயர்த்தப்பட்ட உரங்களின் விலையை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். தவறினால் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகளை திரட்டி பெரும் போராட்டங்களை நடத்துவோம் என்று எச்சரிக்கிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: