பழநியில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழை: குளம்போல தேங்கிய தண்ணீரால் மக்கள் அவதி

பழநி: பழநியில் நேற்று அதிகாலையில் கொட்டித்தீர்த்த மழையால், குளம்போல் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. காலை 10 மணிக்கு முதல் மாலை 5 மணி வரை வெளியில் நடமாட முடியாத அளவிற்கு அனல் வீசி வந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு திடீர் மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் பெய்த மழையால் வெப்பக்காற்று நீங்கி, குளிர்காற்று வீசியது. இந்நிலையில் திடீர் மழையால் விவசாய நிலங்களில் அறுவடை செய்து வைத்திருந்த நெற்பயிர்கள் ஏராளமானவை நாசமடைந்தன.

    பழநி நகரில் ரூபாய் 68 கோடியில் நடந்த சாலைப்பணியில் போதிய வடிகால் வசதி செய்யப்படவில்லை. இதனால், நகரின் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. பழநி பஸ் நிலைய சாலையில் உள்ள நகராட்சி கடைகளில் பலவற்றில் மழைநீர் புகுந்தது. பாய்கடை சந்து பகுதியில் தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் கடும் அவதிக்குள்ளாகினர். போதிய வடிகால் இல்லாததால் ஒவ்வொரு மழை பெய்யும் காலங்களிலும் தண்ணீர் சாலைகளில் குளம்போல் தேங்குவதும், குடியிருப்பு மற்றும் கடைகளுக்குள் புகுந்து விடுவதும் தற்போது வாடிக்கையான ஒன்றாகி விட்டது.எனவே, மாவட்ட நிர்வாகம் சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மூலம் மழைநீர் சாலைகளில் தேங்காமல் செல்ல உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories: