×

மரவள்ளிக் கிழங்கின் கதை

உலகில் அதிகம் உற்பத்தியாகும் உணவுப் பயிர்களில் மரவள்ளிக் கிழங்கும் ஒன்று. மரவள்ளிக் கிழங்கில் அரிசி உணவுகளுக்கு இணையான மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்) இருப்பதால் இதனை  ஆப்பிரிக்கா போன்ற வறுமையான நாடுகளில் முக்கியமான உணவுப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள்.மனிதர் மற்றும் விலங்குகளின் உணவுப் பொருளாக மட்டுமின்றி பல்வேறு தொழில்துறைகளில்  இது ஒரு மூலப்பொருளாகவும் பயன்படுகிறது. மரவள்ளிக் கிழங்கில் சயனோசெனிக் குளுக்கோசைட்டு எனப்படும் நச்சுப் பொருள் உள்ளது. இது இருக்கும் அளவைப் பொறுத்து மரவள்ளிக் கிழங்கு  இனிப்பு மரவள்ளி, கசப்பு மரவள்ளி என இரண்டு வகைகளாக உள்ளது. முறையாகச் சமைக்கப்படாத கசப்பு மரவள்ளி, கோன்சோ என்னும் நோயை உருவாக்கக்கூடும். கசப்பு மரவள்ளிப் பயிர், பூச்சிகள்,  விலங்குகள் போன்றவற்றை அண்டவிடாதிருப்பதால், பயிர் செய்பவர்கள் கசப்பு மரவள்ளியையே பெரிதும் விரும்புகின்றனர்.

தற்காலத்தில் உணவுக்காகப் பயிரிடப்படும் மரவள்ளி, ம. எசுக்கியூலெண்டா தாவர இனத்தின் துணை இனமான பிளபெலிபோலியா என்னும் காட்டு மரவள்ளி இனத்திலிருந்தே உருவானதாகக்  கருதப்படுகின்றது. இக் காட்டுவகையின் வீட்டுப் பயிராக்கம் ஏறத்தாழ 10,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. கிமு 6,600 காலப் பகுதியைச் சேர்ந்த, மெக்சிக்கோ குடாவின் தாழ்நிலப் பகுதியில்  அமைந்துள்ள சான் ஆண்ட்ரெசு தொல்லியல் களத்தில் மரவள்ளி மகரந்தப்பொடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எல் சல்வடோர் நாட்டில் உள்ள 1,400 ஆண்டுகளுக்கு முற்பட்ட மாயன் காலத்துத் தொல்லியல்  களமான ஜோயாடி செரனில் மரவள்ளிப் பயிர்செய்கை குறித்த நேரடியான சான்றுகள் கிடைத்துள்ளன. தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதி, நடு அமெரிக்காவின் தெற்குப் பகுதி, கரிபியப் பகுதி  ஆகியவற்றை எசுப்பானியர்கள் ஆக்கிரமித்த காலத்துக்கு முன்பே, மரவள்ளி, அப்பகுதிகளில் வாழ்ந்த மக்களின் முக்கிய உணவாக இருந்தது. போத்துக்கேய, எசுப்பானியக் குடியேற்ற காலங்களிலும் இப்  பகுதியில் மரவள்ளி தொடர்ந்து பயிரிடப்பட்டது. கொலம்பஸின் காலத்துக்கு முற்பட்ட அமெரிக்க கண்டத்தில் வாழ்ந்த மக்களின் முக்கிய உணவாக விளங்கிய மரவள்ளி அவர்களின் தாயக  ஓவியங்களிலும் இடம் பெற்றுள்ளது. மோச்சே மக்கள் தமது மட்பாண்டங் களில் மரவள்ளியை வரைந்துள்ளனர். இப்படி, அமேசானை பிறப்பிடமாகக் கொண்ட மரவள்ளிக் கிழங்கு இந்தியாவில் 17-ஆம்  நூற்றாண்டில் கேரளாவில் போர்துகீசியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.


- இளங்கோ கிருஷ்ணன்

Tags : மரவள்ளிக் கிழங்கு
× RELATED அடுத்த தலைவலி!! சீனாவில் கிளம்பியுள்ள 'குரங்கு பி வைரஸ்' : டாக்டர் பலி