கிழக்கு கடற்கரை சாலையில் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயணம்: பொதுமக்களை பார்த்து ஆர்வமுடன் கையசைத்தார்

சென்னை: கிழக்கு கடற்கரை சாலையில், நேற்று திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சிக்காக சைக்கிள் பயணம் மேற்கொண்டார். அப்போது, தொண்டர்கள், பொதுமக்களை பார்த்து ஆர்வமுடன் கையசைத்து சென்றார். திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வாரத்தில் 3 நாள் காலையில் சைக்கிளில் சுமார் 20 முதல் 25 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு கடந்த 6ம் தேதி நடந்து முடிந்தது. மு.க.ஸ்டாலின் கடந்த ஒரு மாத காலமாக தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.

இதனால், சைக்கிளில் உடற்பயிற்சி செய்வதை மேற்கொள்ளாமல் இருந்த, மு.க. ஸ்டாலின் வழக்கம்போல் நேற்று காலை முட்டுக்காட்டில் இருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கிய ஸ்டாலின், கோவளம், திருவிடந்தை, வட நெம்மேலி, நெம்மேலி, புதிய கல்பாக்கம், சூளேரிக்காடு, பட்டிப்புலம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் வரை சைக்கிளில் பயணமாக வந்து, தனியார் ஓட்டலில் சற்று நேரம் ஓய்வெடுத்தார். பின்னர், மீண்டும் சென்னைக்கு காரில் ஏறி புறப்பட்டார். ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொண்டபோது, அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு வந்திருந்தனர்.

முன்னதாக, முட்டுக்காட்டில் இருந்து ஸ்டாலின் சைக்கிளில் மாமல்லபுரம் நோக்கி பயணித்து கொண்டிருந்தார். அப்போது, வழியில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை பார்த்து ஆர்வமுடன் கையசைத்தவாறு சென்றார். பொதுமக்களும், தொண்டர்களும் பதிலுக்கு அவரை பார்த்து கையசைத்தனர். இதை பார்த்த மு.க.ஸ்டாலின் உற்சாகமடைந்து சிரித்தவாறு சென்றார்.

Related Stories: