கொரோனா பரவலை தடுக்க டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும்: அரசுக்கு சங்கத்தினர் கடிதம்

சென்னை: கொரோனா பரவலை தடுக்க டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளம் கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் திருச்செல்வன் எழுதியுள்ள கடிதம்: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் 2வது அலை வீச தொடங்கியுள்ளதையொட்டி நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கி காலத்தில் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் மக்கள் அதிகளவில் கூடுகிற இடமாக இருந்த மதுபான கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடப்பட்டன. அதன் பிறகு நீதிமன்ற நிபந்தனைகள் படி மதுபான கடைகள் திறக்கப்பட்டன.

ஆனாலும் நீதிமன்ற நிபந்தனைகள் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. இதனால் 10க்கும் மேற்பட்ட மதுபான கடை ஊழியர்கள் நோய் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுபோன்ற ஆபத்தான நிலைமை ஏற்படாத நிலையை உருவாக்க தமிழ்நாடு அரசு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். எனவே, அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் விற்பனை நேரத்தை நண்பகல் 12 மணியிலிருந்து இரவு 8 மணி வரை என குறைத்திட வேண்டும்.

அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளிலும் சமூக இடைவெளியை பின்பற்றி தடுப்புகள், வரிசைப்படுத்தலை நடைமுறைப்படுத்த வேண்டும். நோய் தொற்றினால் உயிரிழக்கும் ஊழியர் குடும்பத்திற்கு ₹25 லட்சம் நிவாரணமும், ஊழியரது வாரிசுக்கு வேலையும் வழங்க வேண்டும். நோய் பரவக்கூடும் அபாயகரமான இடங்களாக உள்ள அனைத்து மதுக்கூடங்களை மூடிட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: