திருவள்ளூரில் வாக்கு பெட்டி அறைக்கு அருகேயிருந்து கூட்டமாக ஆசிரியர்கள் வெளியே வருவதால் சர்ச்சை

சென்னை: தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்கு பெட்டிகள் திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இதில் திருவொற்றியூர், மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம் ஆகிய  4 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பெட்டிகள் ஸ்ரீராம் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன.  இதன் அருகே இக்கல்லூரி ஆன்லைன் வகுப்பு எடுப்பதாக கூறி 50க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் கூட்டமாக சென்று வருகின்றனர். இதனால் சந்தேகம் அடைந்த அரசியல் கட்சியினர் அவர்களை வழி மடக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டு முற்றுகையிட்டனர்.

வாக்கு எண்ணும் மையத்தின் அருகே ஆன்லைன் வகுப்பு எடுப்பதால் அனைத்து கட்சியினருக்குமிடையே பெரும் சந்தேகத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின்  முகவர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையை போல் தான் அங்கு வரும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறி அப்போது அங்கு ஆய்வு மேற்கொள்ள வந்த மாவட்ட வருவாய் அலுவலர் முத்துச்சாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர் இந்தக் கல்லூரியில் பயிலும்  மாணவர்களுக்காக ஆன்லைன் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும்தான்  அதற்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என  விளக்கம் அளித்து கூறினார். இதனைத் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: