ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கொரோனாவால் உயிரிழப்பு: வெற்றி பெற்றால் இடைத்தேர்தல்..! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். கொரோனா அறிகுறியுடன் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் சார்பில் மாதவராவ் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். இதற்காக வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பரப்புரையில் ஈடுபட்ட அவர் உடல்நலக்குறைவால் ஓய்வெடுத்து கொண்டார். இதனால் இவருடைய மகள் திவ்யா தந்தைக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

63 வயதான மாதவராவ் உடல் நிலை பாதிப்பால் அவர் மகள் வேட்பாளராக மாற்றப்படுவார் என்று தகவல் கசிந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில்காங்கிரஸ் சார்பில் மாதவராவ் தேர்தலில் போட்டியிட்டார். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் இன்று காலை காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 2 வாரமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது. தேர்தல் முடிவு வரும் முன்னரே நிகழ்ந்த மாதவராவ்வின் மரணம் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நடக்கும்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் காங்கிரஸ் வேட்பாளர் மறைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நடக்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். ஒருவேளை மாதவராவ் தேர்தலில் வெற்றி பெற்றால் ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: