கொரோனா 2வது அலை வேகமாக பரவுவதால் உள்நாட்டு விமான நிலையத்தில் இ-பாஸ் முறை மீண்டும் அமல்

சென்னை: கொரோனா 2வது அலை வேகமாக பரவுவதால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இ-பாஸ் முறை  மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் வெளிமாநில பயணிகள் கடந்த 3 மாதங்களுக்கு மேல் இ-பாஸ் இல்லாமலேயே பயணித்து வந்தனர். இந்நிலையில், கொரோனா 2வது அலை தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக அதிகமாக கொரோனா வைரஸ் தொற்று பரவிவருகிறது.

இதையடுத்து நேற்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இதன்படி சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இ-பாஸ் முறை கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில்  நேற்று காலை 9 மணியில் இருந்து இ-பாஸ் முறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு இ-பாசில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட வருவாய்த்துறையினர் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் வருகை பகுதியில் சிறப்பு கவுன்டர்கள் அமைத்து வெளிமாநில பயணிகளுக்கு இ-பாஸ்கள் வழங்கி வருகின்றனர். பல பயணிகள் ஆன்லைன் மூலம் செல்போன்களில் இ-பாஸ்களை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டு அந்த பாஸ்களை காட்டிவிட்டு வெளியே செல்கின்றனர். இ-பாஸ் இல்லாத வெளிமாநில பயணிகளை வெளியே செல்ல அனுமதிப்பதில்லை. தமிழ்நாட்டிற்குள் திருச்சி, கோவை, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய விமான பயணிகளுக்கு இ-பாஸ்கள் தேவையில்லை. ஆனால், அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தப்படுகிறது. கொரோனா தாக்கம் குறைந்து அரசிடம் இருந்து மறுஉத்தரவு வரும்வரை இ-பாஸ் முறை அமலில் இருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: