தமிழகம் முழுவதும் சிறிய, பெரிய கோயில்களில் சித்திரை திருவிழாக்களுக்கு தமிழக அரசு தடை: பக்தர்கள் கடும் கொந்தளிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் சிறிய, பெரிய கோயில்களில் சித்திரை திருவிழாக்கள் நடத்த தமிழக அரசு தடை விதித்து இருப்பது பக்தர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக கோயில்களுக்கு வரும் பக்தர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், கோயிலுக்கு முகக்கவசம் அணிந்து வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்தனர். பங்குனி பெருவிழாவின் போதுகூட இந்த கட்டுப்பாட்டை கடைபிடித்துதான் விழாக்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், தற்போது, மாநிலம் முழுவதும் கோயில்களில் சித்திரை திருவிழா கொண்டாடப்பட இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மேற்கொண்டது. திடீரென சித்திரை திருவிழாவுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இது பக்தர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோயில் பூசாரிகள் சங்க தலைவர் வாசு கூறியதாவது: சித்திரை மாதத்தில் தமிழகத்தில் உள்ள குறிப்பாக கிராமப் பகுதிகளில் உள்ள ஏராளமான கோயில்களில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடப்பது வாடிக்கையாகும். இந்த திருவிழாக்களில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வேண்டுதல்களை நிறைவேற்ற தேர் திருவிழாவில் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்துச் செல்வார்கள். தேர் திருவிழாக்களை முழுமையாக தடை செய்வதை விட சமூக இடைவெளியை முறையாக கடைபிடித்து தேர் திருவிழாவை நடத்த பக்தர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தலாம். அதை விடுத்து முழுமையாக திருவிழாக்களை தடை செய்வது கோயில்களின் நிதி ஆதாரத்தை அறவே தடை செய்வதைப் போன்றதாகும்.

மேலும் திருவிழாக்களை நடத்த அரசு தடை விதிப்பதால் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனையும் குல தெய்வ வழிபாட்டையும் நிறைவேற்ற முடியாமல் தெய்வ நிந்தனைக்கு ஆளாக நேரிடுமே என்று அஞ்சுகின்றனர். இதுபோன்று தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான திருக்கோயில்களின் திருவிழாக்களை சமூக இடைவெளியைக் கடைபிடித்து நடத்த உத்தரவிடவேண்டும். ஒருசில தேர் திருவிழாக்களை அறவே தடை செய்ய பிறப்பிக்கப்பட்ட ஆணையை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். கிராமப்புற கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பெரிய திருக்கோயில்களுக்கு வழங்கப்படுவதைப் போல எவ்வித வேறுபாடும் காட்டாமல் மாஸ்க், கையுறைகள் மற்றும் சானிடைசர்கள் போன்றவற்றை முழுமையான அளவில் தமிழக அரசு வழங்க ஆவன செய்ய வேண்டும். கிராமப்புற திருக்கோயில் பூசாரிகள் அனைவருக்கும் பெரும் தொற்று தடுப்பூசியை தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: