தஞ்சை அம்மாபேட்டையில் குடிகொண்ட கொரோனா: மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதில் பேரூராட்சி ஊழியர்கள் தீவிரம்.!!!

தஞ்சை: தஞ்சாவூரில் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 5,500ஐ நெருங்கி வருகிறது. குறிப்பாக சென்னையில் 1,500ஐ தாண்டியுள்ளது. 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 150ஐ தாண்டியுள்ளது. இதையடுத்து தமிழக அரசு நேற்று முன்தினம் அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி திருவிழா, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்யக்கூடாது, திரையரங்குகள் மற்றும் ஓட்டல்களில் 50 சதவீதம் இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மேலும், கொரோனா நோய் பரவல் 2ம் அலை அதிகரித்து வருவதால் நோய் தொற்று பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் அபராதம் விதிக்கப்படுகிறது. பொது இடங்களில் செல்பவர்கள் முகக்கவசம் அணியாமல் ரூ.200 அபராதமும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூ.500 அபராதமும் விதிக்கப்படுகிறது.

இதற்கிடையே, தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அம்மாபேட்டையில் பள்ளி மாணவர்களுக்கு அதிகளவில் கொரோனா தொற்று ஏற்பட்டது தமிழகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கொரோனா தொற்று அதிகம் பரவி வரும் தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பேரூராட்சியில் அதிகாரிகள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அம்மாபேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாஸ்க் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களிடம் பேரூராட்சி ஊழியர்கள் அபாராதம் விதித்து வருகின்றனர். இதனைபோல், தஞ்சாவூரில் உள்ள கல்லூரிகளிலும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: