சதுரகிரி கோயிலில் பிரதோஷ வழிபாடு

வத்திராயிருப்பு: பிரதோஷத்தையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சதுரகிாி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு அமாவாசை, பௌர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. இன்று பிரதோஷம் என்பதால் இன்று முதல் 12ம் தேதி வரை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிரதோஷத்தையொட்டி அதிகாலை 4 மணி முதலே பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.

காலை 6.45 வனத்துறை கேட் திறக்கப்பட்டது. பக்தர்களுக்கு வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. சானிடைசர் வழங்கப்பட்டது. பக்தர்கள் முகக்கவசம் அணிந்து கோயிலுக்கு சென்றனர். நாளை முதல் கொரோனா கட்டுப்பாட்டுகள் நடைமுறைக்கு வருவதால் குறைவான பக்தர்களே வந்திருந்தனர். பிரதோஷத்தையொட்டி  இன்று மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் என பல்வேறு அபிஷேகம் நடந்தது. இதன்பின் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இரவில் கோயிலில் தங்க பக்தர்களுக்கு அனுமதியில்லை. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாத் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: