பெண்களை பாதிக்கும் நோய்கள்

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

மினி தொடர்

சில பெண் குழந்தைகளோ, பெண்களோ படிக்கும் இடங்கள் அல்லது வேலை செய்யும் இடங்களில் மயங்கி விழுவதைப் பார்ப்போம். ஆண்களை விட  பெண்களுக்கு இப்படி நேர்வதை அதிகம் பார்த்திருப்போம். ஏன் இப்படி ஏற்படுகிறது? எப்படி இதனை சரி செய்யலாம் என்று விளக்குகிறார் மருத்துவர்  திலோத்தம்மாள்.

மயக்கம்

நிலையில்லாத தன்மை, நிற்க முடியாமல் தரை நழுவுவது போன்ற உணர்வு, மிதப்பது போன்றதொரு உணர்வு, சுயநினைவு இழந்து போவது போல்  உணர்தல் போன்றவற்றை மயக்கம் என்கிறோம்.

 

மயக்கத்திற்கான காரணங்கள்

* திடீரென ரத்த அழுத்தம் குறைவது

* ரத்த சோகை

* அடிபட்டு ரத்தம் அதிகமாக வெளியேறிவிடும் நிலைமை

* அளவுக்கு மீறின உடற்பயிற்சி

* உடலில் சர்க்கரையின் அளவு குறைவது

* ஹீட் ஸ்ட்ரோக்

* காதில் ஏற்படும் தொற்றுகள்

* இதய தசைகளில் ஏற்படும் நோய்கள்

* ஆன்சைட்டி (மனநலப் பிரச்னை உடையவர்கள் தனக்கு மயக்கம் வருகிறது என நினைத்துக்கொள்வர்).

* போன்ற காரணங்களாலும் சில சமயங்களில் அரிதாக  மூளைக் கட்டிகள், மல்டிபிள் சிலரோஸிஸ் மற்றும் மூளைக்கோளாறுகள் காரணமாகவும்  மயக்கம் வரலாம்.

சாதாரணமாக மயக்கம் வரும் போது ஏன்? எதனால்? என்று பார்த்து அவர்களுக்கு தேவையான உணவு, நீர் அல்லது ஓய்வை அளிக்க வேண்டும்.  உதாரணத்திற்கு வயிற்றுப் போக்கு, ஹீட்ஸ்ட்ரோக் அல்லது அதீத உடற்பயிற்சியின்காரணமாக  மயக்கம் ஏற்பட்டால் தண்ணீர் நிறைய குடிக்க  வைக்கும் போது மயக்கம் குறையும். தேவையான ஹோம்ரெமிடீஸ் செய்த பிறகு மயக்கம் தெளிகிறதா என்று பார்க்க வேண்டும். தெளிந்த பின் சிறிது  நேரம் கழித்துமருத்துவரிடம் அழைத்துச் சென்று மயக்கம் வந்ததற்கான காரணத்தினை அறிந்து அதற்கான மருத்துவ சிகிச்சையைமேற்கொள்ள  வேண்டும்.

உதாரணத்திற்குப் பரிசோதித்த பின்னர் அவர்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என தெரிந்தால்,மருத்துவர் அதற்கான மருந்துகளை சில  நாட்கள் எடுக்கச் சொல்வார். ரத்த சோகை சரியானதும் அவர்களுக்குமயக்கம் வருவது நின்று விடும். சர்க்கரை அல்லது ரத்த அழுத்தத்தின் காரணமாக  மயக்கம் வருகிறவர்களுக்கு அவற்றின் அளவை சரி செய்யும் போது மயக்கம் வருவதும் சரியாகி விடும். ஆன்சைட்டி பிரச்னை உடையவர்களுக்கு  அதற்கான மருத்துவம் பார்க்கும் போது சரியாகிவிடும். பொதுவாக யாருக்கு என்றாலும் திரும்ப திரும்ப மயக்கம்வந்தால் கட்டாயம் மருத்துவரை  பார்க்க வேண்டும்.

சில நேரங்களில் திடீரென ஏற்படும் மயக்கத்தின் போது உடனுக்குடன் மருத்துவரை பார்ப்பது மிக அவசியம். அதாவது தலையில் அடிபட்டு மயக்கம்  வந்தாலோ, கழுத்து வலி, தலைவலியுடன் கூடிய மயக்கம் வந்தாலோ, அதீத காய்ச்சல், கண் பார்வை மறைப்பது, காது ேகளாத தன்மை, கை கால்  மரத்துப்போதல், பேசுவதில் தடுமாற்றம், சுயநினைவு இழந்து போதல், தொடர்ந்து வாந்தி எடுத்தல், நெஞ்சு வலி போன்றவற்றுடன் மயக்கம் இருக்கும்  போது கட்டாயம் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். மேற்கண்ட பிரச்னைகளுக்கான காரணங்களை அறிந்து அதனை  தீர்க்கும் போது மயக்கம் இல்லாமல் போகும். மயக்கம் என்பது நோயல்ல. வெர்டிகோ எனும் தலைச்சுற்றல் பிரச்னை இருக்கும் போது கூடவே  மயக்கமும் வரலாம்.

தலைச்சுற்றல் (வெர்டிகோ)

தலையோ,  அறையோ நகருவது  அல்லது சுற்றுவது போல் உணர்வது. திடீரென்று வரும். திடீரென தலையை திருப்பும்போதோ அல்லது தடாலென  குனியும் போதோ, சட்டென மேலே நிமிர்ந்து பார்க்கும் போதோ படுக்கையிலிருந்து திடீரென எழுவது போன்றவற்றின் போதோ தலைச்சுற்றல்  ஏற்படலாம். சில நொடிகளுக்கு மட்டும் இருக்கும். சிலநேரங்களில் அதிக நேரமும் நீடிக்கலாம்.

இந்த பிரச்னை தீவிரமாகும் போது தலைச்சுற்றல் உள்ளவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கக்கூடும். மயக்கத்தின் போது நினைவிழத்தல் ஏற்படும்.  ஆனால் கண்ணைத் திறக்க முடியாத அளவு தலைச்சுற்றல் ஏற்பட்டாலும் தலைச் சுற்றலின் போது நினைவு இழத்தல் இருக்காது. நம் உடலை  சமநிலைப்படுத்த உடலில் மூன்று சமநிலைக்கான அமைப்புகள் உள்ளன.

1.உள் காதில் உள்ள ஒரு பகுதி

2.கண்

3.தோல் மற்றும் மூட்டு இவற்றிலிருந்து போகும் ஒரு உணர்ச்சி நரம்பு.

இந்த சமநிலை அமைப்புகள் மூளைக்கு நம்உடலை சமநிலைப்படுத்த செய்தி அனுப்பும். இந்த சமநிலை செய்யும் அமைப்புகளில் பிரச்னை ஏற்படும்  போதோ இந்த தகவல் சென்று சேரும் மூளையின் பகுதியில் பிரச்னை ஏற்படும் போதோ தலைச்சுற்றல் பிரச்னை ஏற்படுகிறது. பலவிதமான  காரணங்களால் வெர்டிகோ பிரச்னை ஏற்படலாம். உள்காதில் சமநிலை அமைப்புக்கு அருகில் ஒலியை மூளைக்குக் கொண்டு செல்லும் நரம்பும்  இருக்கும். இதுஇரண்டும் ஓரிடத்தில் இணையும். அது தான் எட்டாவது நரம்பு என்பார்கள். இது மூளையுடன் இணையும் பகுதி.

சமநிலை அமைப்பு மட்டும் பாதிக்கும் போது தலைச்சுற்றல் பிரச்னை மட்டும் வரும். இதுவே மூளைக்கு ஒலியின் தகவலைக் கொண்டு செல்லும்  நரம்பில் பிரச்னை என்றாலோ, அந்த எட்டாவது நரம்பில் பிரச்னை என்றாலோ, இந்த எட்டாவது நரம்பு இணையும் மூளையின் அந்த குறிப்பிட்ட  பகுதியில் பிரச்னை என்றாலோ காது கேளாத தன்மையும் ஏற்படக்கூடும். சிலருக்கு வெர்டிகோ பிரச்னை தானாகவே சில நாட்களில்  சரியாகிவிடும்.சிலருக்கு வெர்டிகோவிற்கானபயிற்சிகளை மேற்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

தொடர்ந்து அந்த பயிற்சிகளைமேற்கொண்டு வரும் போது தலைச் சுற்றல் பிரச்னை குறையும். சிலருக்கு மருந்து மாத்திரைகளாலோ, அறுவை  சிகிச்சையினாலோ இந்த பிரச்னையை சரி செய்யலாம். வெர்டிகோ பிரச்னைக்கு மருந்துகள் மட்டுமின்றி வாழ்க்கை முறையை மாற்றுவது மிக   அவசியம். படுத்திருக்கும் நிலையிலோ, உட்கார்ந்திருக்கும் நிலையிலிருந்தோ சடாரென எழுந்திருக்கக் கூடாது. மயக்கம் வருவது போல் இருந்தால்  கூடிய மட்டும் உடனே உட்கார்ந்து கொள்ளவோ படுத்துக்கொள்ளவோ வேண்டும்.

அதனால் கீழே விழுவதையோ, அடிபடுவதையோ தவிர்க்க முடியும். ரொம்ப தள்ளாட்டம் இருப்பவர்கள் நடைபயிற்சியின் போதோ, படி இறங்கும்  போதோ கைத்தடி வைத்துக் கொள்வது நல்லது. தொடர்ந்து தள்ளாட்டமாக இருக்கும் போது வாக்கர் கூட பயன்படுத்தலாம். ஆல்கஹால்,  புகைப்பிடிக்கும் பழக்கம், கெஃபைன் கலந்த உணவுகள் போன்ற பழக்கங்களை தவிர்த்தல் நல்லது. வீடு, பாத்ரூம் போன்றவற்றின் தரை வழுக்காதவாறு  வைத்திருக்க வேண்டும். சமநிலையை முன்னேற்றும் யோகா, தாய்ச்சி (Tai Chi) போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

தினசரி எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லது. தினசரி எட்டு மணி நேர தூக்கம் அவசியம். பழம், காய்கறிகளுடன் நல்ல ஆரோக்யமான உணவினை  உட்கொள்ள வேண்டும். புரதச்சத்துள்ள உணவுகள் நன்கு எடுத்துக்கொள்ள வேண்டும். வெளியில் செல்லும் போது வழுக்கும் தரையில் கவனமாக  இருக்க வேண்டும். வீட்டில் நல்ல வெளிச்சம் இருக்க வேண்டும். மன அழுத்தம் தரக்கூடிய சூழ்நிலையை தவிர்க்க வேண்டும்.

சில மருந்துகளால் இத்தகைய தலைச்சுற்றல் ஏற்படும் போது அதை மருத்துவரிடம் தெரிவித்து அந்த மருந்தின் அளவை(டோசேஜை) குறைக்க  வேண்டும். எந்த வித முன் எச்சரிக்கையும் இன்றி அடிக்கடி தலைச்சுற்றல் ஏற்பட்டால் கார் டிரைவிங் மற்றும் கடினமான இயந்திரங்களை இயக்குவது  போன்ற உயிருக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வேலைகளை தவிர்க்க வேண்டும்.  

ஸ்ரீதேவி மோகன்

Related Stories: