திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்

சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். மேலும், வேட்பாளர் நேர்காணல், வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை வெளியீடு போன்றவற்றில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார். தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டார். இந்நிலையில் அவருக்கு லேசான காய்ச்சல் இருந்து வந்தது. நேற்று முன்தினம் அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். கொரோனா பரிசோதனையும் எடுத்துக்கொண்டார். இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து அவர் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தனது இல்லத்தில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள பொதுச்செயலாளர் துரைமுருகன் ஏற்கனவே 2 டோஸ் கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கட்சியினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஏற்கனவே, திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, குணமடைந்து நேற்று முன்தினம் வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: