தமிழக அரசின் புதிய அறிவிப்பில் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் நேரக்கட்டுப்பாடு விதிக்காதது ஏன்? சமூக ஆர்வலர்கள் கேள்வி; மக்கள் நலனைவிட வருவாய் முக்கியமா எனவும் கொந்தளிப்பு

சென்னை: கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளில் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாதது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, தொழில் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. தொடர்ந்து, மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க பேருந்து, ரயில் சேவை முடக்கப்பட்டன. டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டன. அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் மளிகை, காய்கறி கடைகளுக்கு செல்வோர் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அதன்பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. இதை தொடர்ந்து, படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அரசு, தனியார் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. ரயில், பேருந்து சேவை 50 சதவீத இருக்கை அனுமதியுடன் இயக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த மே 7ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் கடும் கட்டுப்பாடுகளுடன் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்பட்டன. ஆரம்பத்தில் டோக்கன் அடிப்படையில் மது விற்பனை செய்யப்பட்டது. டாஸ்மாக் கடைகளில் தடுப்பு வேலி அமைத்து, கட்டம் போட்டு வரிசையில் நின்று குடிமன்கள் மதுபாட்டில்களை வாங்கி செல்லும் நிலை இருந்தது. முதலில் 500 பேருக்கும், தொடர்ந்து, 750 பேருக்கும் டோக்கன் தரப்பட்டு, அதன்பேரிலேயே மது விற்பனை செய்யப்பட்டது.

அதன்பிறகு விற்பனையை அதிகரிக்க டோக்கன் நடைமுறை கைவிடப்பட்டது. தொடர்ந்து, காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை அதாவது மது விற்பனை செய்ய கூடுதலாக 2 மணி நேரம் அதிகரிக்கப்பட்டது. பின்னர், கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து பழைய நேரப்படி பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மதுபான பார்கள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டன. அதே நேரத்தில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்கிற கட்டுப்பாடு தொடர்ந்தது. ஆனால், இந்த கட்டுப்பாட்டை டாஸ்மாக் கடைகளில் முறையாக பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் மீண்டும் அதிகரித்து வருகிறது. தினம்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதேபோல் பலியாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. பேருந்து பயணங்களில் நின்று செல்ல அனுமதி இல்லை, சில்லரை வணிகத்துக்கு தடை, காய்கனி அங்காடிகள் செயல்பட தடை, தேநீர் கடைகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

ஆனால், டாஸ்மாக் கடைகளுக்கும், விற்பனைக்கும் தமிழக அரசு எந்தவித கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. கடந்த ஆண்டு மே மாதம் டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு திறக்கும் போதே அதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மதுவிற்பனை மற்றும் நேரக்கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விதித்தது. ஆனால், நாளடைவில் இது சரிவர கடைபிடிக்கப்படவில்லை. தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் கொரோனா விதிமுறைகள் மீறப்பட்டு வந்தது. இதனால், டாஸ்மாக் கடைகள் மூலம் கொரோனா வேகமாக பரவ வாய்ப்பு இருப்பதாக பல்வேறு தரப்பினரும் எச்சரித்து வந்தனர். இந்நிலையில், புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பில் டாஸ்மாக் கடைகளுக்கு எந்த கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விதிக்காதது அதிர்ச்சி அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறியதாவது: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்த போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மட்டுமே திறக்கப்பட்டது. பின்னர், நேரக்கட்டுப்பாட்டை குறைத்து டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையையும் அரசு உயர்த்தியது. இதனால், அரசுக்கு வரும் வருவாய் நாள்தோறும் ரூ.100 கோடிக்கும் மேல் உயர்ந்தது. 90 சதவீத கடைகளில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை. தற்போது மற்ற தொழில்களுக்கும், கோயில்களுக்கும் புதிய கட்டுப்பாடுகளை அரசுவித்துள்ள தமிழக அரசு டாஸ்மாக் கடைகளில் நேர கட்டுப்பாட்டை விதிக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இரவு 10 மணி வரையில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்க வேண்டும். இதேபோல், பார்களில் மது அருந்தவும் தடை விதிக்க வேண்டும்.

மேலும், தடுப்பூசி போட்டுக்கொண்டால் மது அருந்தகூடாது என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் பெரும்பாலான மது பிரியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே, மது பிரியர்களிடம் கொரோனா தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். மக்கள் செல்லும் கடைகளுக்கு கட்டுப்பாட்டை விதித்து, டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் எந்தவித கட்டுப்பாடும்

விதிக்காதது ஏன். குறைந்தபட்சம் மாலை 6 மணிக்காவது டாஸ்மாக்கை மூடும் வகையில் உத்தரவு போட்டிருக்கலாம். வணிகர்களுக்கு வருவாய் கொடுக்கும் கடைகளுக்கு கட்டுப்பாடு விதித்து விட்டு, அரசுக்கு வருவாயைக் கொட்டிக்கொடுக்கும் டாஸ்மாக்கில் கை வைக்க வேண்டாம் என்ற எண்ணமே இதற்கு காரணம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: