கோவை குனியமுத்தூர் பகுதியில் சாலையோரம் குவிந்து கிடக்கும் கொரோனா கவச உடைகள், ஊசிகள்: அதிகாரிகள் அலட்சியம்; நோய் பரவும் அபாயம்

கோவை: கோவை குனியமுத்தூர் புட்டுவிக்கி சாலையோரம், பயன்படுத்தப்பட்ட கொரோனா கவச உடைகள், ஊசிகள், மாதிரி சேகரிக்கப்பட்ட உபகரணங்கள் குவிந்து கிடப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தினமும் 300 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் பாதிப்பு என வரும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இவர்களுக்கு மூக்கு மற்றும் தொண்டையில் இருந்து மாதிரிகள் எடுக்கப்படும். மாதிரிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பரிசோதனைக்கு பின் முடிவுகள் தெரிவிக்கப்படும். மேலும், கொரோனா நோயாளிகளை கையாளும் மருத்துவர்கள், ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாத வகையில் முழு உடல் கவச உடை அளிக்கப்படுகிறது. இதனை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.

கவச உடைகளை பயன்படுத்திய பின்னர் பயோ வேஸ்டாக கருதி அழிக்க வேண்டும். இல்லையென்றால், இதன் மூலமாக கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள்  தெரிவிக்கின்றனர். இந்நிலையில், கோவை குனியமுத்தூர் புட்டுவிக்கி சாலையோரத்தில் மருத்துவர்கள், நோயாளிகள் பயன்படுத்திய கொரோனா கவச உடைகள், முகக்கவசம், ஊசிகள், கையுறை, மாஸ்க், நோயாளிகளிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் ஆகியவை குப்பைபோல் குவிந்து கிடக்கிறது. ஏற்கனவே, மாவட்டம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் சாலையோரத்தில் வீசப்பட்டுள்ள கொரோனா கிட் உபகரணங்கள் காரணமாக மேலும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உக்கடம் பகுதியில் மேம்பால பணிகள் நடந்து வருவதால் குனியமுத்தூர், போத்தனூர், சுந்தராபுரம் பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் புட்டுவிக்கி வழியாகவே செல்கின்றன. அதிகமான வாகனங்கள், பொதுமக்கள் செல்லும் வழியில் பயன்படுத்திய கொரோனா கிட் கிடப்பது வாகன ஓட்டிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகளின் அலட்சியம்தான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த பயன்படுத்தப்பட்ட கொரோனா கவச உடைகள், கையுறை, மாஸ்க் ஆகியவை எந்த மருத்துவமனையில் இருந்து இங்கு கொட்டி சென்றுள்ளனர் என கண்டறிந்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: