தமிழகத்தில் தேர்தல் அறிவித்த பிறகு 446 கோடி பணம், பரிசு பொருட்கள் பறிமுதல்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி (நேற்று முன்தினம்) வாக்குப்பதிவு நடந்த இரவு 7 மணி வரை பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழு மற்றும் வருமான வரி துறையினர் வாகன சோதனை மற்றும் முக்கிய விஐபிக்களின் வீடுகளில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கடந்த பிப்ரவரி 26ம் தேதியில் இருந்து நேற்று முன்தினம் (6ம் தேதி) வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து சென்ற பணம் மற்றும் பரிசு பொருட்கள் என மொத்தம் 446 கோடியே 28 லட்சம் கைப்பற்றியுள்ளனர். இதில் ரொக்கப்பணம் மட்டும் 236 கோடியே 70 லட்சம். 5 கோடியே 27 லட்சம் மதிப்புள்ள 2,90,284 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

173.19 கோடி மதிப்புள்ள 522 கிலோ தங்கம், 25.64 கோடி மதிப்புள்ள சுவர் கடிகாரம், சேலை, வேட்டி உள்ளிட்ட பரிசு பொருட்கள் என 446.28 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பரிசு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என்றார். நேற்று முன்தினம் சட்டமன்ற தேர்தல் முடிந்ததையடுத்து தமிழகம் முழுவதும் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் அனைத்தும் நேற்று முதல் வாபஸ் பெறப்பட்டு விட்டது. இனி பொதுமக்கள் 50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் செல்ல எந்த தடையும் இல்லை. அதே நேரம் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழகத்தில் அமலில் இருக்கும்.

Related Stories: