கடந்த 2016ம் ஆண்டை ஒப்பிடுகையில் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன்? பரபரப்பு தகவல்கள் அம்பலம்

சென்னை: கடந்த 2016ம் ஆண்டை ஒப்பிடுகையில் சென்னையில் வாக்குப்பதிவு 2 சதவீதம் குறைந்தது ஏன்? என்பது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்தலில் மாநிலம் முழுவதும் 72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில், 16 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சென்னையில் மட்டும் 59.06 சதவீதம் குறைவாக வாக்குகள் பதிவாகியுள்ளது. இது கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் (60.09 சதவீதம்) மிகவும் குறைவு தான். இந்த தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்ததற்கு கருத்துக்கணிப்புகள் தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலானவை திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றே வந்தது. இதனால், திமுக தான் வெற்றி பெற போகிறது என்கிற எண்ணத்தில் அதிமுகவினர் தேர்தல் வேலைகள் மேற்கொள்வதை தவிர்த்தனர். மேலும், அதிமுகவில் வேட்பாளர்களாக அறிவித்த பலரும் எம்எல்ஏவாக இருந்தபோது கட்சியினரை கண்டுகொள்ளவில்லை.

எந்த உதவி கேட்டு சென்றாலும் அவர்களை உதாசீனப்படுத்தி திருப்பி அனுப்பினர். மேலும், சட்டமன்ற தொகுதிக்கு வேண்டாதவர்களும், கட்சிக்கு வேலை செய்யாதவர்களும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். இதனால், அதிமுக வேட்பாளர்கள்  உடன் கட்சியினர் பிரசாரத்தின் போது கூட செல்லாமல் ஒதுங்கி விட்டனர். சட்டமன்ற தேர்தல் நடந்த நாளில் கூட பல தொகுதிகளில் வாக்கு சேகரிக்க கூட வாக்குச்சாவடி மையம் அருகே கட்சியினர் இல்லை. அதே நேரத்தில் திமுகவினர் வேகமாக செயல்பட்டனர். பல வாக்குச்சாவடி மையங்களில் திமுகவினர் தான் இருந்தனர். குறிப்பாக, வாக்குச்சாவடி அருகே இருந்தவர்கள் திமுகவுக்கு அதிகமாக வாக்குகள் பதிவாவதை அறிந்ததால் விரக்தியில் இருந்த அதிமுகவினர் பிற்பகலுக்கு மேல் கிளம்பி சென்று விட்டனர். இதனால், சென்னையில் பல வாக்குச்சாவடி மையங்களில் திமுகவினர் மட்டுமே இருந்தனர். இதனால், அதிருப்தியடைந்த அதிமுகவினர் இந்த தேர்தலில் வாக்களிப்பதையே தவிர்த்து விட்டனர்.

தேர்தலன்று ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் பூத் ஏஜெண்டுகள் இல்லை. பிற்பகல் 3 மணிக்கு மேல் அந்த தொகுதியில் ஒரு சில வாக்குச்சாவடி மையங்களில் இருந்த பூத் ஏஜெண்டுகள் கூட கிளம்பி சென்று விட்டனர். மேலும், சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்தது. இது, தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியது. தேர்தலன்று வெயிலின் கொடுமை மற்றும் கொரோனா தொற்றுக்கு பயந்து வீட்டை விட்டு வசதி படைத்தவர்களும், முதியோர்களும் வெளியே வரவில்லை. குறிப்பாக, அபார்ட்மென்ட், தனி வீட்டில் வசிக்கும் வசதி படைத்தவர்களும், முதியோர்களும் வீட்டை விட்டு வெளியே வராமல் வாக்களிப்பதையே ஒட்டுமொத்தமாக தவிர்த்து விட்டனர். அதே போன்று, தேர்தல் ஆணையம் சார்பில் அனைத்து தொகுதிகளிலும் பூத் சிலிப் முறையாக விநியோகிக்கப்படவில்லை. குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சென்று பூத் சிலிப் வழங்குவதில் பெரும் இடையூறு இருப்பதாக கூறி ஊழியர்கள் பூத் சிலிப் விநியோகிக்கவில்லை.

இதனால், பெரும்பாலான வாக்காளர்கள் வாக்குச்சாவடி மையங்கள் ெதரியாததால் அவர்கள் வாக்களிக்க செல்லவில்லை. மேலும், வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்ற பலரது பெயர் வேறு வாக்குச்சாவடி மையத்தில் இருப்பதாக கூறி திருப்பி அனுப்பபட்டனர். இதனால், விரக்தியடைந்த வாக்காளர்கள் வீடுகளுக்கு திரும்பினர். இந்த குழப்பம் காரணமாக சென்னையில் வாக்கு பதிவுகள் குறைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories: