போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் கர்நாடகாவில் அரசு பஸ் சேவை முடக்கம்: பேச்சுவார்த்தைக்கு முதல்வர் அழைப்பு

பெங்களூரு: கர்நாடக போக்குவரத்து கழக ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நேற்று முதல் தொடங்கியதால் மாநிலம் முழுவதும் அரசு பஸ் சேவை முடங்கியது. கர்நாடக போக்குவரத்து கழகம், பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம், வடகிழக்கு மற்றும் வடமேற்கு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் தங்களின் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டி கடந்தாண்டு டிசம்பர் மாதம் 5 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். அப்போது ஊழியர் சங்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய  துணை முதல்வரும் போக்குவரத்து துறை அமைச்சருமான லட்சுமண்சவதி, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.

ஆனால், 4 மாதங்களாகியும் கோரிக்கைகளை நிறைவேற்றாததால், நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்கள் தொடங்கின. இதனால், கர்நாடகாவில் பஸ் சேவை கடுமையாக பாதித்துள்ளது. இந்நிலையில், பெலகாவியில் முதல்வர் எடியூரப்பா நேற்று அளித்த பேட்டியில், ``பிரச்னை பேசி தீர்க்கலாம். கன்னட, தெலுங்கு, தமிழ் புத்தாண்டு என தொடர்ந்து பண்டிகைகள் வருகின்றன. இந்த நேரத்தில் வேலை நிறுத்தம் செய்வதால் மக்கள் பாதித்துள்ளனர். ஆகவே, போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். இல்லை என்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். இந்நிலையில், போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளதால், பெங்களூருவில் தர்ணா, ஊர்வலம் உள்ளிட்ட எந்த போராட்டமும் நடத்தக்கூடாது என்று 144வது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: