புதுகை மாவட்டத்தில் விறுவிறு வாக்குப்பதிவு

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்புடன் அமைதியாக நடந்து முடிந்தது.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, விராலிமலை, கந்தர்வகோட்டை, திருமயம் என புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பெரும்பாலான வாக்குச்சாவடி மையங்களில் கோடை காலத்தை கருத்தில் கொண்டு வாக்காளர்களின் நலன் கருதி பந்தல் அமைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன. ஒருசில வாக்குச் சாவடிகளில் பந்தல் அமைக்கப்படவில்லை. அடிப்படை வசதிகளுடம் முறையாக இல்லை. இதனால் சில வாக்குச்சாவடி முதியவர்கள் வெயிலுக்காக ஒதுங்கியே இந்தனர்.

புதுக்கோட்டையில் உள்ள பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி, காமராஜபுரம், போஸ் நகர், திருக்கோகர்ணம் அரசு பள்ளி, அரசு மகளிர் கலை கல்லூரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். ஒருசில வாக்குச்சாவடி மையங்களில் வெயிலின் தாக்கம் காரணமாக நேரம் ஆக ஆக வாக்காளர்களின் கூட்டம் குறைய தொடங்கியது. கிராமங்களில் வாக்குச்சாவடிகள் வெறிச்சொடி காணப்பட்டன. வாக்குப்பதிவையொட்டி பெரும்பலான கடைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், ஒட்டல்கள் மூடப்பட்டிருந்தன. ஒருசில ஓட்டல்கள் மதியம் வரை செயல்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நடக்க முடியாத முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைவரும் ஆர்வமுடன் வாக்களித்தனர். முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக சக்கர நாற்காலி வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே உள்ள ஆவூர் கிராமத்தில் வாக்குப்பதிவு மையம் அருகே அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளை சேர்ந்தவர்கள் அமர்வதற்காக பந்தல் அமைக்கப்பட்டிருந்தனர். இதனை போலீசார் வந்து அகற்ற சொன்னபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுதுது துணை ராணுவம் கொண்டு வரப்பட்டு இரண்டு பந்தல்களும் அகற்றப்பட்டது. இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

* வேட்பாளர்கள் வாக்களிப்பு

புதுக்கோட்டை கீழ நான்காம் வீதியில் உள்ள அரசு பள்ளியில் திருமயம் தொகுதி திமுக வேட்பாளர் ரகுபதி வாக்களித்தார். புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் கீரனூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், புதுக்கோட்டை திமுக வேட்பாளர் முத்துராஜா அன்னசத்திரம் அரசு பள்ளியிலும், அதிமுக வேட்பாளர் கார்த்திக்தொண்டைமான் அரசு மகளிர் கல்லூரியிலும் வாக்களித்தனர்.

* வாக்கு இயந்திரம் மக்கர்

மாத்தூர் அருகே உள்ள பாக்குடி, புதுக்கோட்டை அரசு ஐடிஐ ஆகிய இடங்களில் காலையில் வாக்கு பதிவு தொடங்கிய நேரத்தில் முறையாக செயல்படவில்லை. இதனால் வாக்குசாவடி அலுவலக்கும், வாக்காளர்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சில இடங்களில் வாக்கு பெட்டி மிஷியின் செயல்படாததலால் வாக்களர்கள் வாக்களிக்க முடியமல் சிரமப்பட்டனர். பின்னர் பொறியாளர்கள் விரைந்து வந்து சரி செய்தபிறகு தொடர்ந்து வாக்கு பதிவு நடைபெற்றது. திருயம் திமுக வேட்பாளர் ரகுபதி புதுக்கோட்டை கீழ நான்காம் வீதியில் உள்ள அரசு பள்ளியில் வாக்களிக்க வந்தபோது இயந்திரம் பழுதானது. பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் வாக்குபதிவு தொடங்கியது. இதனால் சுமார் முக்கால் மணிநேரம் காத்திருந்து வாக்களித்துவிட்டு சென்றார்.

* வாக்காளர்களுக்கு கையுரை

புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர் பகுதியில் அனைத்து இடங்களிலும் வாக்காளர்களுக்கு கொரோன பாதுகாப்புக்காக கையுறை வழங்கப்பட்டு, வெப்ப நிலை பரிசோதித்து அனுமதிக்கப்பட்டது. மேலும், வாக்காளர்கள் முககவசம் அணிந்து வந்தவர்களை மட்டுமே வாக்களிக்க அனுதிமக்கப்பட்டனர். கிராம புரங்களில் இது பெரிதாக கடைபிடிக்கவில்லை.

* கடமை மாறாத போலீசார்

புதுக்கோட்டை நகர் பகுதியில் வாக்களர்கள் நீண்ட வரிசையில் வாக்களிக்க நின்று கொண்டு இருந்தனர். அப்போது போலீசாருக்கு மதிய சாப்பாடு வழங்கப்பட்டது. போலீசார் அந்த சாப்பாட்டை நின்று கொண்டு சாப்பிட்டு கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். இதனை பார்த்த வாக்களர்கள் வரிசையாக தொந்தரவு செய்யாமல் வாக்களிக்க சென்றனர்.

* கடும் வெயிலால் சிரமம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெயில் வாட்டி எடுத்தது. பெருவாரியான வாக்குசாவடிகளில் வாக்களர்கள் நின்று வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யவில்லை. இதனால் வெயிலில் நீண்ட நேரம் நிற்க முடியாததால் வாக்காளர்கள் பலர் தலையில் துண்டையும், பெண்கள் சேலையின் முந்தானையை தலைக்கு போட்டுக்கொண்டு காத்திருந்து வாக்களித்தனர். சில இடங்களில் முதியவர்கள் வாக்குச்சாவடி ஓரத்தில் அமர்ந்து விட்டனர். புதுக்கோட்டை நகர் பகுதியில் வயது முதிர்ந்த பெண்கள் தள்ளுவண்டியில் வந்து ஜனநாயக கடமைகளை நிறைவேற்றினர். இதனை பார்த்த அலுவலர்கள் மற்றும் போலீசார் அவர்கள் வாக்களிக்க தேவையான உதவிகளை செய்து கொடுத்தனர்.

* குடும்பத்துடன் வந்த வாக்காளர்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர் புறத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு குடும்பத்தில் தகுதியுள்ள அனைவரும் வாக்குசாடிக்கு கார்களின் வந்தனர். அவர்களுக்கு தேவையான அடையாள அட்டைகளை கொண்டு வந்து காத்திருந்து வாக்களித்துவிட்டு சென்றனர். சில இடங்களில் வாக்களிக்க தகுதியுள்ள திருநங்கைகள் தங்கள் வாக்குகளை ஆர்வமுடன் வந்த வாக்குகளை செலுத்திவிட்டு சென்றனர்.

* 13,52,972 வாக்காளர்கள்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தமாக 6,67,127 ஆண் வாக்காளர்களும், 6,85,776 பெண் வாக்காளர்களும், 69 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்பட மொத்தம் 13 லட்சத்து 52 ஆயிரத்து 972 வாக்காளர்கள் உள்ளனர். புதுகை மாவட்டத்தில் 6 சட்ட பேரவை தொகுதிகளான புதுக்கோட்டையில் 346, அறந்தாங்கியில் 343, விராலிமலையில் 310, ஆலங்குடியில் 311, கந்தர்வகோட்டையில் 273, திருமயத்தில் 319 உள்பட மொத்தம் 1902 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 9,128 அரசுப் பணியாளர்களும், போலீசார் 3 ஆயிரத்து 400 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியிலும் வாக்குச்சாவடி மையங்களில் 9,128 அரசுப் பணியாளர்களும் பணியில் ஈடுபட்டனர்.

* வாக்குப்பெட்டிகளுக்கு சீல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகையில் நேற்று 7 மணியுடன் வாக்கு பதிவு நிறைவு பெற்றது. இதனை அடுத்து வாக்கு பெட்டிகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள் வாகனத்தில் ஏற்றி வாக்கு எண்ணும் மையமான புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரிக்கு கொண்டு சென்று பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. இங்கு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

கொரோனா பாதித்த 5 பேர் வாக்குப்பதிவு

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டுமே கொரோனா சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றாளர்களுக்கு அஞ்சல் வாக்கு வழங்க தேர்தல் ஆணையம் முன்வந்தது. ஆனால் யாரும் அஞ்சல் வாக்கினை பெறவில்லை. அதேநேரத்தில் வாக்குப்பதிவின் கடைசி நேரத்தில் உரிய கவச உடை பாதுகாப்புடன் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் மருத்துவனையில் சிகிச்சை பெறுவோரிடம் வாக்களிக்க விருப்பம் கோரப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் இருந்தபோதும் 3 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என மொத்தம் 5 பேர் மட்டும் பாதுகாப்பு கவச உடை அணிந்து வாக்களிக்க முன்வந்தனர்.

இவர்கள் 5 பேரும் வாக்குப்பதிவின் கடைசி நேரத்தில் அழைத்து வரப்பட்டு வாக்களித்தனர். அப்போது வாக்குச்சாவடிகளில் பணியில் இருந்தோரும் பாதுகாப்பு கவச உடை அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத் துறை துணை இயக்குநர் டாக்டர் கலைவாணி தலைமையிலான மருத்துவக் குழுவினர் செய்திருந்தனர்.

76.32 சதவீதம் வாக்குப்பதிவு

கரூர் : புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் நேற்று இரவு 7 மணி வரை 76.32 சதவீதம் வாக்குப்பதிவானது. தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விவரம்

கந்தர்வக்கோட்டை 75.4 சதவீதம்

விராலிமலை    85.43 சதவீதம்

புதுக்கோட்டை    72.94 சதவீதம்

திருமயம்    75.89 சதவீதம்

ஆலங்குடி    78.44 சதவீதம்

அறந்தாங்கி    70.37 சதவீதம்

இளம் வாக்காளர்கள் ஆர்வம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் முதல் முறையாக இளம் வாக்காளர்கள் நண்பர்களுடன் ஒன்று சேர்ந்து வாக்களிக்க வாக்குசாவடிக்கு வந்தனர். அப்போது எப்படி ஓட்டு போடுவது என்று அவர்களுக்குள் ஆலோசனை செய்துகொண்டும், வாக்கு சாவடிக்குள் என்ன நடக்கிறது என்று ஆர்வமாக பார்த்தையும் காண முடிந்தது.

Related Stories: