குமரி மாவட்டத்தில் 45 இடங்களில் வாக்கு இயந்திரங்கள் பழுது-தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு 10 முதல் 20 நிமிடங்கள் வரை தாமதமாக தொடங்கியது.

கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தல் மற்றும் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் குமரி மாவட்டத்தில் மொத்தம் 2243 வாக்குச்சாவடிகளில் நேற்று காலையில் தொடங்கி நடந்தது. காலை 5.30 மணிக்கே மாதிரி வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று உத்தரவு அமலில் இருந்தபோதிலும் காலை 7 மணிக்கே பல இடங்களிலும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதனால் 100க்கும் மேற்பட்ட வாக்குசாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்க அரை மணி நேரத்திற்கும் மேல் தாமதம் ஆனது. முகவர்கள் வருகையில் தாமதம், தேர்தல் பணி அலுவலர்களுக்கு போதிய பயிற்சியின்மை போன்றவையும் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட காரணமாக அமைந்தது.

நாகர்கோவில் டதி பெண்கள் மேல்நிலை பள்ளி, வெள்ளிச்சந்தை அரசு உயர்நிலை பள்ளி உள்ளிட்ட இடங்களில் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கி முதல் வாக்குப்பதிவு நடைபெற 7.30 மணியை கடந்தது. வெப்பநிலை பரிசோதனைக்கு ஒவ்வொரு வாக்குசாவடிக்கும் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது.

ஆனால் ஒரு பள்ளி, கல்லூரிக்கு ஒருவர் மட்டுமே வெப்பநிலை பரிசோதனைக்கு நியமிக்கப்பட்டிருந்தார். மேலும் கிளவுஸ், சானிட்டைசர் போன்றவை வழங்க நியமிக்கப்பட்டிருந்த நபர்கள் யாரும் வாக்குப்பதிவு தொடங்கும் நேரம் முன்பாக வாக்குச்சாவடிக்கு வந்து சேரவில்லை. இதனால் வாக்குச்சாவடிகளில் கூட்டம் நிரம்பி வழிந்ததால் கொரோனா தடுப்பு விதிமுறைகளை சரியாக பின்பற்ற இயலாத நிலை ஏற்பட்டது.

நித்திரவிளை: கிள்ளியூர் தொகுதியில் நித்திரவிளை அருகே  117ஏ வாக்குச்சாவடியில் (பெண்கள்) காலை 10 மணியளவில் இயந்திரம் பழுதாகி சுமார் அரை மணிநேரம் வாக்குப்பதிவு தடைபட்டது. வாக்குச்சாவடி எண் 27ல் ஊனமுற்ற ஒருவரின் வாக்கை முகவர் போட்டு விட்டார் என்று பிரச்னை ஏற்பட்டது. எண் 28ல் காலையில் மெஷின் பழுதாகி 15 நிமிடங்கள் வாக்குப் பதிவு தடைபட்டது.

எண் 62ல் வாக்களித்த சின்னம் தெரியவில்லை என்று சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. கொல்லங்கோடு அருகே அடைக்காகுழி எண் 77 மெஷின் பழுதாகி 15 நிமிடங்கள் கழித்து சரி செய்யப்பட்டது.குமரி மாவட்டம் சுங்கான்கடை பகுதியில் உள்ள வாக்குசாவடி எண் 299ல் 179 வாக்குகள் பதிவான நிலையில் பதிவான வாக்குகள் அனைத்தும் தாமரை சின்னத்திற்கு விழுந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பிரின்ஸ் எம்.எல்.ஏ மற்றும் கட்சியினர் அங்கு வந்தனர். இது தொடர்பாக கேள்வி எழுப்பிய இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த இயந்திரம் மாற்றப்பட்டு வேறு இயந்திரம் மூலம் வாக்குபதிவு நடைபெற்றது.

பூதப்பாண்டி அருகேயுள்ள சீதப்பால் அரசு உயர்நிலை பள்ளி வாக்குசாவடியில் 8 மணியளவில் வாக்குபதிவு இயந்திரம் பழுதடைந்தது. இதனால் வாக்குபதிவு முடங்கியது. பின்னர் வேறு இயந்திரம் கொண்டுவரப்பட்டு வாக்குபதிவு நடத்தப்பட்டது.

பள்ளம் தூய மேத்யூஸ் மேல்நிலை பள்ளியில் உள்ள வாக்குசாவடியில் வாக்குபதிவு இயந்திரம் பழுதானது. பின்னர் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.

திருவட்டார் அரசு உயர்நிலை பள்ளியில் வாக்குசாவடி எண் 73ல் மின்னணு இயந்திரம் பழுது காரணமாக வாக்குபதிவு பாதிக்கப்பட்டது. குளச்சல் தொகுதியில் வாக்குசாவடி எண் 201ல் ஆலன்விளை அரசு நடுநிலை பள்ளி, வாக்குசாவடி எண் 203 கொடுப்பை குழி அரசு நடுநிலை பள்ளி ஆகிய இடங்களில் மின்னணு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது.

அஞ்சுகிராமம் அருகே வாரியூர் அரசு மேல்நிலை பள்ளியில் மக்களவை தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் பழுதடைந்ததால் வாக்குபதிவு தாமதம் ஆனது. ஆரல்வாய்மொழி அருகே மாதவலாயம் அரசு உயர்நிலை பள்ளியில் உள்ள வாக்குசாவடியிலும் வாக்குபதிவு குளறுபடிகள் ஏற்பட்டது. இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதம் ஏற்பட்டது. பின்னர் அங்கு வாக்குபதிவு தொடர்ந்து நடைபெற்றது.

இரணியல் அரசு மகளிர் உயர்நிலை பள்ளியில் வாக்குசாவடி எண் 265 மற்றும் 268 ஆகியவற்றிலும், பேயன்குழி அரசு நடுநிலை பள்ளியில் வாக்குசாவடி எண் 278, வில்லுக்குறி அரசு நடுநிலை பள்ளியில் உள்ள வாக்குசாவடி உட்பட குமரி மாவட்டம் முழுவதும் 45 வாக்குசாவடிகளில் மின்னணு இயந்திரங்களில் பழுது காரணமாக வாக்குபதிவு தாமதம், மின்னணு இயந்திரங்களை மாற்றி வேறு இயந்திரங்கள் வைத்தது போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டன.

திருவட்டாரில் வாக்குப்பதிவு  3மணி நேரம் நிறுத்தம்

பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவட்டார் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஆண்களுக்கான வாக்குச்சாவடியில் சட்டமன்ற தேர்தலுக்கான    வாக்குப்பதிவு இயந்திரம் திடீரென பழுதானது.  அதனை தொடர்ந்து அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் வாக்கு பதிவு செய்ய முடியாமல் வாக்காளர்கள் வேண்டிய  நீண்ட நேரமாக காத்திருந்தனர்.

இந்நிலையில்  இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் தகவல் அளித்ததைத் தொடர்ந்து விரைந்து வந்த அதிகாரிகள் வாக்காளர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பொறியாளர்கள் பழுதான வாக்குப்பதிவு இயந்திரத்தை சரி செய்தனர். இதனால் மூன்று மணி நேரத்திற்கு பின்  வாக்குப்பதிவு  தொடர்ந்து நடைபெற்றது. இயந்திரக் கோளாறால் வாக்காளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது. வாக்குபதிவு இயந்திரத்தை சீரமைக்க தாமதமானதால் ஏராளமான வாக்காளர்கள் வாக்களிக்காமல் வாக்குச்சாவடியில் இருந்து திரும்பி சென்றனர்.

Related Stories: