கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் குறிப்பிட்ட வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களின் விவரம் அழிப்பு: அதிகாரிகளுடன் வாக்குவாதம்

பெரம்பூர்: கொளத்தூர் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் ஏராளமானோர் பெயர் நிராகரிக்கப்பட்டதால் பொதுமக்கள் வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதனால் வாக்குச்சாவடி மையங்களில் குழப்பம் ஏற்பட்டது. கொளத்தூர் சட்டசபை தொகுதியில் 424 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த தொகுதியில் ஒரு பாகத்திற்கு சராசரியாக 900 முதல் 1500 பேர் வரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவார்கள் என அதிகாரிகளால் கூறப்படுகிறது. இதில் பொதுவாக தேர்தலுக்கு முந்தைய கணக்கெடுப்பில் ஏறக்குறைய ஒரு பாகத்திற்கு 50 பேர் வரை நிராகரிக்கப்படுவர். இதில் இறந்தவர்கள், வேறு தொகுதிக்கு இடம் பெயர்ந்தவர்கள் அடங்குவர். ஆனால் இந்தமுறை 150 முதல் 200 பேர் வரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், குறிப்பாக கொளத்தூர், 20வது பாகத்தில் 208 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பாகத்திற்குட்பட்ட பொதுமக்கள் நேற்று வில்லிவாக்கம், ஜானகிராம் காலனியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி  மையத்திற்கு சென்றபோது அவர்களை வாக்குபதிவு செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் தேர்தல் பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், போலீசார் உதவியுடன் பொதுமக்கள் வாக்குசாவடி மையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.இருப்பினும்,  ஓட்டுப்பதிவு செய்ய என்ன வழிமுறை என அறிவதற்காக மதியம் 2.30 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் காத்திருந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இச்சம்பவம் கொளத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பெண்மணி ஒருவர் கூறுகையில், ‘எனது ஓட்டுரிமை பறிபோனது நான் முகவரி மாற்றவில்லை, என் மகனுக்கு ஓட்டுரிமை உள்ளது. நான் ஓட்டுப்போட சென்றால் உங்களது பெயர் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஓட்டுப்போட அனுமதி இல்லை எனக்கூறி என்னை வெளியேற்றினர். நான் மட்டும் அல்ல இந்த ஓட்டுச்சாவடி மையத்தில் பலர் இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

எனது வாக்குரிமை பறிபோனதற்கு யார் பெறுப்பேற்பார்கள்? இதற்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன், என்றார். இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் கூறுகையில், ‘நான் ஓட்டு போடச் சென்றால் எனக்கு ஓட்டு இல்லை என்று கூறி ஏளனமாக நடத்துகின்றனர் எனது பெயர் வாக்காளர் பட்டியலில் 15 நாட்களுக்கு முன் வரை இருந்தது. இங்கு வந்து பார்த்த போது எனது பெயர் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. யாரும் உரிய பதில் அளிக்கவில்லை. காரணம் கேட்டால் வில்லிவாக்கம், ஜானகிராம் காலனியில் உள்ள தனியார் பள்ளி ஓட்டுச்சாவடி தேர்தல் பணியாளர்கள் ஏளமான நடத்துகின்றனர்,’ என்றார்.  கடைசி நேரத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் திமுகவினர் என்பது குறிப்பிடத்தக்கது

Related Stories: