செய்யாறு சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த பழுதான வாக்குப்பதிவு இயந்திரங்கள்: திமுக ஏஜென்ட்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம்

செய்யாறு: செய்யாறு சப்-கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் வாக்குப்பதிவு இயந்திரத்துடன், பழுதான இயந்திரங்களும் வைக்கப்பட்டிருந்ததால், திமுக ஏஜென்ட்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சப்-கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் (ஸ்ட்ராங் ரூம்) வைக்கப்பட்டிருந்தது. இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், நேற்று காலை 11.30 மணி அளவில் பொது பார்வையாளர் கமலேஸ்வர் பிரசாத் சிங், செலவின பார்வையாளர் சந்தீப் குமார் சிங், தேர்தல் நடத்தும் அலுவலர் ந.விஜயராஜ் உள்ளிட்ட வருவாய் துறையினர், திமுக ஏஜென்ட்டுகள் முன்னிலையில் அறையின் சீல் உடைக்கப்பட்டது. பின்னர், பூட்டை திறந்து உள்ளே சென்று மின்விளக்கை போட்டனர்.

அப்போது ஸ்ட்ராங் ரூம் வராண்டாவில் 13 பழுதான வாக்குப்பதிவு இயந்திரங்கள், 15 விழிப்புணர்வுக்காக பயன்படுத்தும் இயந்திரங்கள் இருந்தது. இதைப்பார்த்த திமுக ஏஜென்ட்டுகள், ஏன் வாக்குச்சாவடிக்கு செல்லும் இயந்திரத்தின் அருகிலேயே இதை வைத்துள்ளீர்கள்? தனி அறையில் வைக்க வேண்டியதுதானே என்றும், கூடுதலாக உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள பெட்டியின் மேல் புறத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தின் பதிவு எண்கள் ஏன் குறிப்பிடவில்லை என்றும் அதிகாரிகளிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தேர்தல் அலுவலர் விஜயராஜ், தேர்தல் பொது பார்வையாளர், செலவின பார்வையாளர் ஆகியோர் திமுகவினர் சுட்டி காட்டிய குறைகள் உடனடியாக சரி செய்யப்படும் என்று கூறி, சரி செய்தனர். மதியம் 1.50 மணி அளவில் வாக்குச்சாவடி மையங்களுக்கு லாரிகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

Related Stories: