எம்எல்ஏவாக பொறுப்பு வகித்த 5 ஆண்டுகளில் சைதாப்பேட்டை தொகுதியில் 3 மிகப்பெரிய வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தியுள்ளேன்: மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ அறிக்கை

சென்னை: எம்எல்ஏவாக பொறுப்பு வகித்த 5 ஆண்டுகளில் சைதாப்பேட்டை தொகுதியில் 3 மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தியுள்ளேன் என்று மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ கூறியுள்ளார். சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கை: சைதாப்பேட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக நான் பொறுப்பு வகித்த கடந்த 5 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் 3 மிகப்பெரிய வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் 6000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று தரப்பட்டிருக்கிறது.

கலைஞர் கணினி கல்வியகத்தின் மூலம் 253 மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி வழங்கப்பட்டு வேலைவாய்ப்பும் பெற்றுதரப்பட்டிருக்கிறது. அதே போல் பசுமை சைதை என்கிற ஒரு உன்னதமான திட்டத்தின்கீழ் 1 லட்சம் நாட்டு மரங்கள் நடப்படுகின்ற திட்டம் தொடங்கப்பட்டு 90 ஆயிரம் மரங்கள் இதுவரை நடப்பட்டிருக்கிறது. மழைநீர் சேகரிப்பு மையங்கள், குளம் தூர்வாருதல் மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க குடிநீர் விநியோகம் போன்ற பணிகள் அரசிள் உதவியில்லாமலேயே சைதாப்பேட்டை தொகுதியில் செய்து தரப்பட்டிருக்கிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ள 7 உறுதிமொழிகள் மற்றும் தேர்தல் அறிக்கை சிலவற்றை உங்களின் கவனத்திற்கு கொண்டுவருவது என் கடமை என்று கருதுகிறேன். பசுமை பரப்பை கூடுதலாக்குவது, கல்வி இடைநிற்றல் சதவீதத்தை குறைப்பது, மழைநீர் வீணாவதை குறைப்பது, விவசாயத்தை பாதுகாப்பது மற்றும் செழிக்க செய்வது, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிப்பது, 30 வயதிற்கு உட்பட்ட தமிழக மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்வது, வேலைவாய்ப்புகளில் 75 சதவீதத்தை தமிழர்களுக்கே உறுதி செய்வது போன்ற எண்ணற்ற திட்டங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். எனவே, திமுக தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்களை சைதாப்பேட்டை தொதியில் வசிக்கின்ற இளம் தலைமுறை வாக்காளர்களாகிய உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கின்ற தூதுவனாக செயல்படுவேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: