ரஃபேல் விமான ஒப்பந்தத்துக்கு இந்திய இடைத்தரகருக்கு பிரான்சின் டசால்ட் நிறுவனம் ரூ.8.62 கோடி வழங்கியது அம்பலம்

டெல்லி: ரஃபேல் விமான ஒப்பந்தத்துக்கு இந்திய இடைத்தரகருக்கு பிரான்சின் டசால்ட் நிறுவனம் ரூ.8.62 கோடி வழங்கியது அம்பலமானது. டசால்ட் நிறுவன கணக்குகளை பிரான்ஸ் ஊழல் தடுப்புப்பிரிவு ஆய்வு செய்ததில் பெரும் தொகை கைமாறியது தெரியவந்தது. பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் 36 ரபேல் விமானங்கள் வாங்க ரூ.58,000 கோடிக்கு இந்தியா ஒப்பந்தம் செய்தது. ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வந்தது. இடைத்தரகருக்கு ரூ.8.62 கோடி வழங்கியதற்கு ரபேல் தயாரிப்பு நிறுவனமான டசால்ட் முறையான விளக்கம் அளிக்கவில்லை.

இந்தியாவுடனான ரஃபேல் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து பிரான்சின் மீடியாபார்ட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 2012ல் காங்கிரஸ் அரசு 126 ரஃபேல் விமானங்களை ரூ.41,212 கோடிக்கு வாங்குவதாக ஒப்பந்தம் செய்திருந்தது. 2016ல் பிரதமர் மோடி பழைய ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு 36 விமானங்களை ரூ.58,000 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்தார். காங்கிரஸ் அரசு ஒரு விமானத்தை ரூ.350 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்த நிலையில் ரூ.1,670 கோடிக்கு வாங்க பாஜக அரசு ஒப்பந்தம் செய்தது.

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்துடன் ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு பிரான்ஸ் அரசுடன் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் செய்திருந்தது.

ஏற்கெனவே செய்த ஒப்பந்தத்தின்படி முதல் கட்டமாக 10 ரஃபேல் விமானங்கள் தயாராக இருந்த நிலையில், அதில் 5 விமானங்கள் 2020-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி இந்தியா வந்தன. அவை முறைப்படி இந்திய விமானப் படையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ம் தேதி இணைக்கப்பட்டன.

2-வது கட்டத்தில் 3 ரஃபேல் போர் விமானங்கள் 2020 நவம்பர் 3-ம் தேதி வந்தன. 3-வது கட்டத்தில் 3 போர் விமானங்கள் 2021, ஜனவரி 27-ம் தேதி வந்தன. பிரான்ஸிலிருந்து 4-வது கட்டமாக 3 ரஃபேல் போர் விமானங்கள் மார்ச் 31ல் இந்திய மண்ணில் வந்து சேர்ந்தன.

இந்த ரஃபேல் போர் விமானம் அதிநவீனத்துடன் பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஆயுதம் தயாரிப்பு நிறுவனமான மீட்டோர் நிறுவனத்தின் சிறப்பு அம்சங்களான வானிலிருந்தே இலக்கைக் குறிவைத்துத் தாக்குதல், ஏவுகணை இடைமறித்துத் தாக்குதல் போன்ற அதிநவீன அம்சங்கள் ரஃபேல் விமானத்தில் உள்ளன.

Related Stories: