சத்தீஸ்கரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து மத்திய அமைச்சர் அமித்ஷா வீரவணக்கம்!!

ராய்ப்பூர் : சத்தீஸ்கரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் உடலுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா நேரில் அஞ்சலி செலுத்தினார். சட்டீஸ்கர் மாநிலம், சுக்மா- பிஜப்பூர் மாவட்ட எல்லைக்கு இடையே உள்ள காட்டுப் பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, மாநில போலீசார், துணை ராணுவ படையினர், கோப்ரா சிறப்பு படையினர், மாவட்ட ரிசர்வ் போலீசார் என 1,500 வீரர்கள், கடந்த வெள்ளிக்கிழமை இரவு அந்த காட்டுப்பகுதியை சுற்றி வளைத்தனர். பல்வேறு பிரிவுகளாக பிரிந்து, நக்சல்களை தேடினர்.

அப்போது, ஜோனகுண்டா கிராமத்தில் உள்ள காட்டில் பதுங்கி இருந்த நக்சல்களை பாதுகாப்பு படையினர் நெருங்கினர். இதனால், வீரர்கள் மீது நக்சல்கள் திடீரென இயந்திர துப்பாக்கிகளால்  சுட்டனர். காட்டின் மேல் பகுதிகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட நக்சல்கள், வீரர்களை மூன்று பக்கத்தில் இருந்தும் சுற்றி வளைத்து சுட்டனர். டிகுண்டுகளையும் வீசி தாக்கினர். இந்த தாக்குதலுக்குப் பிறகு அங்கு வீரமரணம் அடைந்து விழுந்திருந்த 22 வீரர்களின் சடலங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், 30க்கும் மேற்பட்ட வீரர்கள் குண்டு பாய்ந்து காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சத்தீஸ்கர் சென்றார். ஜகதல்பூரில் அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல், அமித்ஷாவை வரவேற்றார். தொடர்ந்து, மாவோயிஸ்டுகளுடனான மோதல் நடைபெற்ற சுக்மா-பிஜப்பூர் பகுதியை அமித்ஷாவும் பூபேஷும் பார்வையிட்டனர். பின்னர் இருவரும் ஜக்தல்பூரில் வீர மரணம் அடைந்த 14 பாதுகாப்பு படையினருக்கு மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர். மேலும் படுகாயமடைந்த ராணுவ வீரர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கிறார் அமித்ஷா. இதையடுத்து மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் பாதுகாப்பு படையினருடன் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளார்.

Related Stories: