3 நாட்கள் தொடர் விடுமுறை ஒரே நாளில் ரூ.160 கோடிக்கு மது விற்பனை

சென்னை: சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் விடுமுறை விடப்பட்டதால் நேற்று முன்தினம் ஒரேநாளில் தமிழகத்தில் ரூ.160 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. 3 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு வரும் 7ம் தேதி தான் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும். இந்தநிலையில், நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.

பல்வேறு மாவட்டங்களில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் நீண்ட வரிசையில் நின்று குடிமகன்கள் மதுபானங்களை வாங்கிசென்றனர். குறிப்பாக சென்னை, மதுரை, திருச்சி மண்டலங்களில் வழக்கத்தை விட அதிக விற்பனை நடைபெற்றது. டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்திருந்த 30 சதவீதத்திற்கு மேல் விற்பனை நடைபெற்றது. வழக்கமான நாட்களில் ரூ.90 கோடி வரையில் மட்டுமே தமிழகத்தில் மதுவிற்பனை நடைபெறும். ஆனால், நேற்று ரூ.160 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories: