அரசு பணத்தை செலவு செய்து பத்திரிக்கை, ஊடகங்களில் அதிமுக விளம்பரங்களை செய்து வருகிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: அரசு பணத்தை செலவு செய்து பத்திரிக்கை, ஊடகங்களில் அதிமுக விளம்பரங்களை செய்து வருகிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடக்கிறது. இதற்கான பிரசாரம் இன்று இரவு 7 மணியுடன் ஓய்கிறது. இதனால் இறுதிகட்ட பிரசாரத்தில் தலைவர்கள் இறங்கியுள்ளனர். சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அப்போது பேசிய அவர்; சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக - பாஜகவுக்கு ஜீரோ கொடுத்தால் நாம் தான் ஹீரோ. தமிழகம் முழுவதும் ஒரு தொகுதியில் கூட அதிமுக - பாஜக கூட்டணி வெல்லக்கூடாது. அதிமுகவினர் வென்றால் பாஜக எம்.எல்.ஏ.க்களாக மாறிவிடுவார்கள்.

நாடாளுமன்ற தேர்தலை போல சட்டமன்ற தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெறும். பாஜகவின் காவி கொள்கையை தமிழகத்தில் கொண்டுவர முடியாது. இது திராவிட மண், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த மண். மோடி மஸ்தான் வேலை எல்லாம் தமிழகத்தில் பலிக்காது. அரசு பணத்தை செலவு செய்து பத்திரிக்கை, ஊடகங்களில் அதிமுக விளம்பரங்களை செய்து வருகிறது. கொரோனா காலத்திலும் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றியது திமுக. அதிமுகவில் ஊழல் செய்தவர்கள் மீது திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக கொண்டு வரும் மக்களுக்கு எதிரான திட்டங்களை அதிமுக ஆதரிக்கிறது. மதவெறி பிடித்த பாஜகவுக்கு துணை நிற்கும் அதிமுக அரசுக்கு தேர்தலில் பாடம் புகட்டுவோம் என கூறினார்.

Related Stories: