சென்னையில் 327 வாக்குச்சாவடிகள் பதற்றமற்றவை, 10 மையங்கள் மிகவும் பதற்றமானவை: சென்னை மாநகர காவல் ஆணையர் பேட்டி

சென்னை: சென்னையில் 327 வாக்குச்சாவடிகள் பதற்றமற்றவை, 10 மையங்கள் மிகவும் பதற்றமானவை என சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று இரவு 7 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதனால் இறுதிகட்ட பரப்புரையில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத ஆட்கள் தொகுதியில் இருந்து வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மீறினால் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்; சென்னையில் தேர்தல் பாதுகாப்பு பணியில் 23,500 போலீசார் ஈடுபடுத்தப்படுவர். சென்னையில் 18 கம்பெனி துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் பரப்புரை முடிந்தபின் வெளியாட்கள் யாரும் இருக்க கூடாது; இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் பூத்கள் இருக்க வேண்டும். சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும். சென்னையில் 327 வாக்குச்சாவடிகள் பதற்றமற்றவை, 10 மையங்கள் மிகவும் பதற்றமானவை. வாக்களிக்கும் போது செல்போன் வைத்திருக்க அனுமதி இல்லை.

மதுபானங்கள் விற்பனை, கடத்தலை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் இதுவரை ரூ.44.11 கோடி, 15 கிலோ தங்கம், 190 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய சென்னை போலீஸ் சார்பில் செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. 044 - 2345 2437 மற்றும் 94981 81239 என்ற சிறப்பு கட்டுப்பாட்டு அறையில் புகார்களை தெரிவிக்கலாம் என கூறினார்.

Related Stories: