3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி ஒரே நாளில் 130 கோடிக்கு மது விற்பனை?

சென்னை: தேர்தலை முன்னிட்டு இன்று முதல் வரும் 6ம் தேதி வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் விடுமுறை என்பதால் குடிமகன்களின் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. தமிழகத்தில் நாளை மறுநாள் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் இன்று முதல் வரும் 6ம் தேதி வரையில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதை அறிந்து நேற்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வரிசையில் நின்று குடிமகன்கள் மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.

மணலி, திருவொற்றியூர், ஆவடி, தண்டையார்பேட்டை, சேப்பாக்கம், மயிலாப்பூர், தாம்பரம், திருவல்லிக்கேணி, எழும்பூர், தி.நகர், மாதவரம், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக அதிக விற்பனை நடைபெற்றது. குறிப்பாக, ரூ.2 லட்சம் விற்பனை நடைபெற்ற கடைகளில் ரூ.5 லட்சம் வரையில் நேற்று விற்பனை நடைபெற்றதாக தெரிகிறது. மேலும் சாக்குப்பை, அட்டைபெட்டிகள் ஆகியவற்றை கொண்டுவந்து மதுபானங்களை குடிமகன்கள் அள்ளிச்சென்றனர். மேலும், நேற்று கிடைத்தால் போதும் என்று மதுபானங்களை குடிமகன்கள் வாங்கினர். ஒரேநாளில் தமிழகம் முழுவதும் ரூ.130 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Related Stories: