போயஸ் கார்டன் வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்தியதை எதிர்த்த வழக்குகளின் தீர்ப்பு: உயர் நீதிமன்றம் ஒத்திவைப்பு

சென்னை: ஜெயலலிதாவின் வேதா நிலையத்தின் நிலம் கையகப்படுத்தியதை எதிர்த்தும், அதற்கு இழப்பீடு நிர்ணயித்ததை எதிர்த்தும் தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.  மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தை அவரது நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முடிவெடுத்து அதை கையகப்படுத்தி, அதற்கான தொகையை அமர்வு நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளது. இந்நிலையில், ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தங்களிடம் ஆலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபக் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வீட்டிற்கு 67 கோடியே 90 லட்ச ரூபாய் அளவிற்கு இழப்பீடு நிர்ணயித்து, அந்த தொகையை சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் நிலம் கையகப்படுத்துதல் அதிகாரி செலுத்தியதை எதிர்த்து ஜெ.தீபாவும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகளின் விசாரணை நீதிபதி என்.சேஷசாயி முன்பு நடந்து வந்தது. தீபா மற்றும் தீபக் தரப்பில் ஜெயலலிதாவிற்கு ரத்த முறை நேரடி வாரிசுகள் இல்லாததால், அவரது அண்ணன் பிள்ளைகளான தங்களை வாரிசுகளாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவர் வாழ்ந்த இடத்தை புனிதமாக கருதி முறையாக பராமரிக்க திட்டமிட்டிருந்த நிலையில், தங்களின் கருத்துகளை கேட்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், நிலத்தை கையகப்படுத்த ஒப்புதலே தெரிவிக்காத நிலையில், அந்த நிலத்தை மதிப்பீடு செய்தும், அசையும் சொத்துகளை முறையாக மதிப்பீடு செய்யாமலும் 68 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், வேதா நிலையத்தை கையகப்படுத்தும் முன்பே அனைத்து தரப்பு கருத்துகளையும் அரசு கேட்டறிந்தது. அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட விதத்திலும் பல்வேறு பிரச்னைகளை ஜெயலலிதா எதிர்கொண்டபோது தீபா, தீபக் ஆகியோர் அவருக்கு உறுதுணையாக இல்லை. ஒருவர் குடியிருந்த வீட்டை நினைவில்லமாக மாற்ற சுற்றுச்சூழல் சான்றிதழ் எதுவும் தேவையில்லை என்று தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இரு வழக்குகளின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

Related Stories: