புனித வெள்ளி அனுசரிப்புகிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

சென்னை: இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான நேற்று கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுதல் பெருவிழா ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஈஸ்டருக்கு முந்தைய 46 நாட்கள் கிறிஸ்தவர்களின் தவக்காலமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாட்களில் கிறிஸ்தவர்கள் நோன்பு இருப்பார்கள். அசைவ உணவுகளை சாப்பிட மாட்டார்கள்.  ஏழை, எளியோருக்கு உணவு அளித்து தர்ம காரியங்களில் ஈடுபடுவது வழக்கம்.  கிறிஸ்தவர்களின் வீடுகளில் திருமணம் உள்ளிட்ட ஆடம்பர நிகழ்ச்சிகள் நடைபெறாது. தவக்காலத்தின் முதல் 40 நாட்களும் அனைத்து ஆலயங்களிலும் இயேசுவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூரும் வழிபாடுகள், ஆராதனைகள் நடந்தன.  ஈஸ்டருக்கு முந்தைய வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி சாம்பல் புதன், வியாழக்கிழமை பாதம் கழுவும் நிகழ்ச்சிகளும் நடந்தன.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, நேற்று கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனைகள் நடந்தன. அருட்பணியாளர்கள், இயேசுவின் சிலுவைப்பாட்டு வசனங்களை சொல்லி மன்றாட்டு நடத்தினர். அதை தொடர்ந்து, மாலையில் திருச்சிலுவை வழிபாடு நடந்தது. புனித வெள்ளியை தொடர்ந்து உயிர்ப்பு விழாவான ஈஸ்டர் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் சனிக்கிழமை நள்ளிரவிலும், சி.எஸ்.ஐ. ஆலயங்களில் ஞாயிறு அதிகாலை 4.30 மணிக்கும் சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக புனித வெள்ளி வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகள் அனைத்தும் அரசு அறிவித்துள்ள கொரோனா கட்டுப்பாட்டு விதிகளின்படி நடந்ததாக ஆலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories: