திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டிய விவகாரம்; பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு...தேர்தல் ஆணையம் நடவடிக்கை.!!!

கரூர்: பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் எம்எல்ஏவாக இருப்பவர் செந்தில்பாலாஜி. இவர் தற்போது, கரூர் தொகுதியில் போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரத்தின்போது பாஜக வேட்பாளர் அண்ணாமலை செந்தில் பாலாஜியை  தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில் செந்தில் பாலாஜியை மிரட்டும் வகையில், அரவக்குறிச்சி அருகே பூமத்தேவம் பகுதியில் நடந்த பிரசாரத்தில் அண்ணாமலை பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் அண்ணாமலை பேசியதாவது: அரசியலுக்கு வந்த பிறகு அமைதியா இருக்க வேணும்னு நினைக்கிறேன். செந்தில்பாலாஜியை எல்லாம் தூக்கி போட்டு மிதிச்சேன்னா, பல்லு கில்லு எல்லாம் வெளியே வந்துடும். உன்ன மாதிரி எவ்வளவு பெரிய ஃபிராடுகளை எல்லாம் பார்த்துட்டு வந்திருக்கேன் நானு. நீ எல்லாம் ஒரு ஆளுன்னு.. நீ எல்லாம் ஒரு இது. உனக்கு பயந்து கை வைச்சா வயலன்ஸ் பண்ணினேன்னு மாத்திவிடுவியா?.. அண்ணாமலையை வயலன்ஸ்-ன்னு மாத்திடுவியா?. அதனால, தி.மு.க.காரனுக்கு நான் எச்சரிக்கை வெச்சிட்டு போறேன்.. அகிம்சைவாதியா அரசியல் போராட்டத்தை நடத்திட்டு இருக்கேன். ஆனா, எனக்கு இன்னொரு முகம் இருக்கு.. அது கர்நாடகா முகம்.. அதை நான் இங்கே காட்டவா..

காட்டவா...அப்படி காட்ட வேணாம்னு நினைக்கிறேன்... வீடியோ எடுப்பியா.. வந்து எடுத்துட்டு போ.. எலெக்‌ஷன் கமிஷன்ல கொடுப்பியா கொடுத்துட்டு போ... நீ என்ன செய்றியோ செய்.. இதுக்கெல்லாம் பயப்படற ஆள் நான் கிடையாது. இவ்வாறு வீடியோவில் பேசி உள்ளார். ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி, இவ்வாறு பொது வெளியில் முன்னாள் அமைச்சரும் தற்போதைய வேட்பாளருமான செந்தில்பாலாஜிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. எனவே, அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்தன.

இந்நிலையில், கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டிய புகாரில் அரவகுறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில் அண்ணாமலை மீது தேர்தல் ஆணையம் என்ன? நடவடிக்கை எடுக்கும் என்று அரசியல் கட்சியினர் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

Related Stories: