வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கும் வேட்பாளரை தகுதி நீக்க கோரி பெண்கள் தர்ணா போராட்டம்

சென்னை: சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி, அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவன தலைவரும், அக்கட்சியின் வேட்பாளருமான ராஜேஸ்வரி பிரியா தலைமையில் நேற்று சோழிங்கநல்லூர் தொகுதி தேர்தல் அலுவலகமான மாநகராட்சி 15வது மண்டலத்தில் தர்ணா போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டனர். ஈஞ்சம்பாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் அதிமுக வேட்பாளர் படம், இரட்டை இலை சின்னம் பதிந்த துண்டு பிரசுரங்களை வைத்து பணம் பட்டுவாடா செய்த இருவரை திமுகவினர் பிடித்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், நேற்று பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில் அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்தனர். இரவு நேரத்தில் மின்சாரத்தை துண்டித்துவிட்டு பணம் பட்டுவாடா செய்வதாகவும் ராஜேஸ்வரி பிரியா குற்றம்சாட்டினார். இப்படி வாக்குக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர் போட்டியிடாதவாறு தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி, தேர்தல் அதிகாரி லட்சுமணனிடம் ராஜேஸ்வரி பிரியா புகார் மனு நேற்று கொடுத்தார். இதுதொடர்பாக, சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரி லட்சுமணன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததால் தேர்தல் அலுவலகம் முன்பு அமர்ந்து வேட்பாளர் உட்பட பெண்கள் சுமார் 20 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் செம்மஞ்சேரி போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து, வேட்பாளர் ராஜேஸ்வரி பிரியா கூறுகையில் ‘‘பணம் பட்டுவாடா செய்யும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அதிகாரிகள் விசாரிக்க நீண்ட நாட்கள் ஆகும் என கூறுகின்றனர். பணம் கொடுக்கும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இல்லையென்றால் இந்த தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். தேர்தலை நடத்துவதை விட ஏலம் விட்டுவிடலாம்’’  என தெரிவித்தார்.

Related Stories: