அடுத்த உத்தரவு வரும் வரை டெல்லியில் எந்தவொரு பள்ளியும் திறக்க அனுமதியில்லை: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

புதுடெல்லி: டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் நடப்பு கல்வியாண்டில் அடுத்த உத்தரவு வரும் வரை மூடப்படும் என்றும். எந்தவொரு வகுப்பு மாணவரையும் பள்ளிக்கு நேரடியாக வருமாறு அழைக்கக்கூடாது என்றும பள்ளி நிர்வாகங்களுக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு  தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாகவே  டெல்லியில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் பல்வேறு மாநிலங்கள் பகுதி பகுதியாக ஓரளவு பள்ளிகளை மீண்டும்  திறந்தன. எனினும், டெல்லி அரசு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான  மாணவர்களுக்கான செய்முறை பயிற்சிக்காகவும்,  சந்தேகங்களை தீர்த்துக்கொள்வதற்காகவும் ஜனவரி 18 மற்றும் பிப்ரவரி 5 முதல் திறக்க அனுமதி வழங்கியது.

குறிப்பாக, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான இடைக்கால தேர்வுகள், போர்டு தேர்வுக்கு முந்தைய தேர்வுகள் / ஆண்டு  தேர்வுகள் / வாரிய தேர்வுகளுக்காக மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதலையும், பிற உதவுகளையும் வழங்குவதற்காக மட்டுமே பள்ளிக்கு மாணவர்களை அழைக்கலாம் என்றும்  வலியுறுத்தியிருந்தது. அதுவும் பெற்றோரின் சம்மத கடிதம் பெற்ற பின்னரே வர வேண்டும்என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.இந்நிலையில், பெரும்பாலான வகுப்புகளுக்கு இறுதி தேர்வுகள் முடிந்து ரிசல்ட் வெளியிடப்பட்டுவிட்டது. இதனால், ஏப்ரல் 1 முதல் அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்த உத்தரவு வரும் வரை எந்தவொரு வகுப்பு மாணவர்களையும் பள்ளிக்கு நேரடியாக வருமாறு அழைக்கக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதேசமயத்தில் ஏப்ரல் 1 முதல் ஆன்லைனில் வகுப்புகள் தொடங்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் கல்விக்கு 6 பேர் குழு அமைப்பு

டெல்லி பட்ஜெட்டில் ஆன்லைன் கல்வி பற்றி அறிவிக்கப்பட்டு இருந்தது. இது டெல்லி மாடல் ஆன்லைன் கல்வி என்று அழைக்கப்படும் என்று துணை முதல்வர் சிசோடியா அறிவித்து இருந்தார். இதுபற்றி நேற்று அவர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் அவர் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், ஐடி அதிகாரிகள் கொண்ட 6 பேர் குழுவை அமைத்து இருக்கிறார். இந்த குழுவினர் கூடி ஆலோசித்து அதற்கான அறிக்கையை ஒருவாரத்தில் தாக்கல் செய்ய அவர் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் நியூசிலாந்து பாணியில் இந்த பள்ளிகள் அமைய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி உள்ளார்.

இதற்காக குழுவினர் வெளிநாட்டு குழுவுடன் ஆலோசிக்கவும் அனுமதி வழங்கியுள்ளார். இந்த முறைப்படி மாணவர்களுக்கு பொதுவான ஒரு அடையாள எண் வழங்கப்படும். வழக்கமான பாடத்திட்டங்கள் அடிப்படையில் மாணவர்கள், ஆசிரியர்கள் கல்வி கற்றல் முறை நடைபெறும். பள்ளி முதல்வர் இந்த பள்ளியை எங்கு இருந்து வேண்டுமானாலும் நடத்தலாம், சோதனை செய்யலாம், தேர்வு செய்யலாம்.

துணைேவந்தருடன் சிசோடியா ஆலோசனை

டெல்லி பல்கலை துணை வேந்தர் பிசி ஜோஷியுடன் நேற்று துணை முதல்வர் சிசோடியா ஆலோசனை நடத்தினார். அப்போது டெல்லி பல்கலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், டெல்லி அரசும், பல்கலையும் இணைந்து செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. மேலும் டெல்லி பல்கலை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

Related Stories: