சட்டப்பேரவை தேர்தலையொட்டி சொந்த ஊர்களில் வாக்களிக்க வசதியாக சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்...!

சென்னை: சட்டப்பேரவை தேர்தலையொட்டி, மக்கள் தங்களது சொந்த ஊர்களில் வாக்களிக்க வசதியாக சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் வரும் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. சட்டப்பேரவை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்யும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி, சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் இன்றுமுதல் 5-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதன்படி சட்டப் பேரவை தேர்தலையொட்டி இன்று முதல் 5-ம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2,225 பேருந்துகளுடன், சிறப்பு பேருந்துகளாக 3,090 என மொத்தம் 14,215 பேருந்துகளை இயக்கப்பட உள்ளன. கோவை, திருப்பூர், சேலம், பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2,644 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கூட்ட நெரிசலைக் குறைத்து, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வரும் 4, 5-ம் தேதிகளில் மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் பேருந்து நிலையங்கள், தாம்பரம் ரயில்நிலையம் அருகே என பேருந்துகளை பிரித்து இயக்கப்பட உள்ளன. சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் திரும்பி வர ஏதுவாக வரும் 7-ம் தேதி முதல் போதிய அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் பொது மக்கள் www.tnstc.in. என்ற இணையதளம் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் உரிய கொரோனா பாதுகாப்பு நடவடவடிக்கைகளுடன் பயணம் செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Related Stories: