மதுராந்தகம் அருகே பரபரப்பு; உணவகத்தை சூறையாடிய மர்மநபர்கள் சுற்றி வளைத்து கைது: சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஆத்திரம்

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அருகே உணவகம் ஒன்றில் சாப்பிட்டு விட்டு, அதற்கு பணம் தர மறுத்து உணவக உரிமையாளர், ஊழியர்களை சரமாரியாக தாக்கி, உணவகத்தை சூறையாடிய மர்மநபர்களை போலீசார் கைது செய்தனர். திண்டிவனத்தில் இருந்து சென்னை மார்க்கமாக தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை ஒரு வேன் வந்தது. அதில் இருந்த சிலர், ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் உணவகம் ஒன்றில், டிரைவர் உள்பட 16 பேர் குறிப்பிட்ட அந்த ஓட்டலில் சாப்பிட்டனர். அப்போது, அனைவரும் மது அருந்திவிட்டு போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. சாப்பிட்டு முடித்த பிறகு, அவர்கள் ஓட்டலை விட்டு வெளியே சென்றனர்.

இதை பார்த்த ஊழியர்கள், அவர்களை அழைத்து சாப்பிட்டதற்கு பணம் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், தகராறில் ஈடுபட்டனர். பின்னர், வேனில் மறைத்து வைத்திருந்த இரும்பு தடி, உருட்டு கட்டைகள் ஆகியவற்றை கொண்டு வந்து உணவக ஊழியர்கள் மற்றும் உரிமையாளரை சரமாரியாக தாக்கினர். இதில் அவர்கள், படுகாயமடைந்தனர். மேலும், உணவகத்தில் இருந்த பொருட்களையும் அடித்து உடைத்துள்ளனர். பின்னர் அங்கிருந்து சென்னை நோக்கி தப்பி சென்றனர். தகவலறிந்து அச்சிறுப்பாக்கம் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும், வாக்கி டாக்கி மூலம், அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், மதுராந்தகம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் அச்சிறுப்பாக்கம் - மதுராந்தகம் இடையே, அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தினர். பின்னர், வேனுடன் அவர்களை அச்சிறுப்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் யார், எங்கிருந்து வந்தார்கள், தேர்தல் நேரத்தில் ஆயுதங்களுடன் வேனில் சுற்றிவது எதற்காக என தீவிரமாக விசாரிக்கின்றனர். இதற்கிடையில், தாக்குதலில் படுகாயமடைந்த உணவக உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் 3 பேர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Related Stories: