முதல்வர் எடப்பாடி குறித்து பேசிய விவகாரம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஆ.ராசா விளக்கம்

சென்னை: முதல்வர் எடப்பாடி குறித்து பேசிய விவகாரம் குறித்து, திமுக எம்பி ஆ.ராசா, வழக்கறிஞர் மூலம் தலைமை தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கடிதம் கொடுத்தார். திமுக எம்பி ஆ.ராசா பிரசாரத்தின்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாயார் பற்றி பேசியதாக அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து ஆ.ராசா பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டார். ஆனாலும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி முன் நேற்று மாலைக்குள் ஆஜராகி இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது. இதையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் நேற்று ஆ.ராசா சார்பில் ஒரு விளக்க கடிதத்தை அவரது வழக்கறிஞர் பச்சையப்பன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து அளித்தார்.

அந்த கடிதத்தில் ஆ.ராசா கூறி இருப்பதாவது: திராவிட இயக்கத்தில் வளர்ந்த நான் ஒரு போதும் பெண்மையையோ, தாய்மையையோ இழிவாக பேசியதில்லை, பேசுபவனும் இல்லை. தன்னுடைய பேச்சை திரித்து, அரசியல் காரணங்களுக்காக, நான் பேசியதற்கு புறம்பாக உள் அர்த்தங்களை கற்பித்து அதிமுக மற்றும் பாஜவினரால் தேர்தல் நேரத்தில் ஆதாயத்திற்காக பேசப்படுகிறது. நான் முதலமைச்சரை அவதூறாக பேச வேண்டும் என்ற உள்நோக்கம் இல்லை. என்னுடைய பேச்சு திரித்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

என்னுடைய முழு பேச்சையும் ஆய்வுக்கு உட்படுத்தினால் என் பேச்சில் எவ்வித அவதூறும் இல்லை என்பது தெரியவரும் அதிமுகவின் புகார் நகலையும், தேர்தல் ஆணையம் கவனத்திற்கு எடுத்துக்கொண்ட முழு விவரங்களையும் தனக்கு அளிக்க வேண்டும். அவற்றை பெற்றப்பின் முழு விளக்கம் கொடுப்பேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Related Stories: