பிரியாணி-மதுவுக்கு ஓட்டை விற்றால் நல்ல தலைவரை எதிர்பார்க்க முடியுமா? ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி

மதுரை: பிரியாணி, மது பாட்டிலுக்கு வாக்குகளை விற்றால் நல்ல தலைவர்களை எதிர்பார்க்க முடியுமா? என்று ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். நெல்லை மாவட்டம், கடையநல்லூர் முள்ளிக்குளத்தைச் சேர்ந்த சந்திரமோகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘55 ஆண்டுகள் தனித்தொகுதியாக உள்ள தென்காசியையும், 43 ஆண்டுகளாக தனித்தொகுதியாக உள்ள வாசுதேவநல்லூரையும் பொதுத்தொகுதியாக மாற்றி தேர்தல்கள் நடத்தவும், வாசுதேவநல்லூரை பொதுத்தொகுதியாக மாற்றாமல் தேர்தல் நடத்தக் கூடாது எனவும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: தேர்தலில் நல்லவிதமான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவது, மருத்துவ வசதி, கல்வி, வேளாண் முன்னேற்றம் போன்ற வாக்குறுதிகள் வழங்குவது நல்லது. ஜனநாயக நாட்டில் இதுதான் எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சிகள் இதைப் போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான வாக்குறுதிகளை வழங்குவது ஏற்கத்தக்கது.

அரசியல் கட்சியினரின் தேர்தல் வாக்குறுதிகளையும், இலவசங்களையும் முறைப்படுத்த வேண்டுமென உச்சநீதிமன்றம் கூறியபடி மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா? இதுவரை எத்தனை தேர்தல்களில் இந்த அறிவுறுத்தலை தேர்தல் ஆணையம் பின்பற்றியுள்ளது? எந்தெந்த தேர்தல் வாக்குறுதிகளில் தேர்தல் ஆணையம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது?

தேர்தல் ஆணைய அதிருப்தி அடிப்படையில் எந்த வாக்குறுதியாவது நீக்கப்பட்டதா? எந்த கட்சியின் வாக்குறுதி நீக்கப்பட்டது? தேவையற்றது மற்றும் காரணமில்லாத வாக்குறுதி வழங்கப்படக் கூடாது என தேர்தல் ஆணையம் ஏன் அறிவுறுத்தக் கூடாது? சமூக நலத்திட்டங்கள் எனும் பெயரில் மக்களை சோம்பேறியாக்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகளை ஏன் தேர்தல் ஆணையம் தடை செய்யக்கூடாது? தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்த முடியுமா என்பது குறித்து வல்லுநர் கருத்து பெறப்பட்டுள்ளதா? தேர்தல் வெற்றிக்கு பிறகு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகிறதா? கடந்த 4 சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் அரசியல் கட்சியினரின் வாக்குறுதிகள் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது?

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதற்கேற்ற வகையில் சுழற்சி முறையில் தொகுதிகளை ஏன் மறுசீரமைப்பு செய்யக் கூடாது என்பதற்கான விளக்கத்தை பெற இந்த நீதிமன்றம் விரும்புகிறது. அரசியல் கட்சிகள் மாநில அரசின் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இலவச திட்டங்களை நிறைவேற்ற கடன் பெறுவதால் மாநிலத்தின் நிதி சுமை கூடுகிறது. இதற்காக மதுக்கடைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக கூறுகின்றனர். பிரியாணி மற்றும் மதுபாட்டில்களுக்காக தங்களது வாக்குகளை விற்பனை செய்யக்கூடாது. இப்படி வாக்குகளை விற்றால் எப்படி நல்ல அரசியல் தலைவர்களை எதிர்பார்க்க முடியும். இவ்வாறு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ‘‘இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் தரப்பில் விரிவாக பதிலளிக்க வேண்டும்’’ எனக் கூறி விசாரணையை ஏப். 26க்கு தள்ளி வைத்தனர்.

* ‘‘தமிழர்கள் தொழிலாளி வடமாநிலத்தவர் முதலாளி’’

நீதிபதிகள் மேலும் கூறுகையில், ‘‘தமிழக வணிக நிறுவனங்கள், சலூன்கள் மற்றும் கட்டிட தொழில்கள் உள்ளிட்ட பலவற்றில் வடமாநிலத்தவர்கள் நிறைந்துள்ளனர். ஆனால், பொறியியல் பட்டதாரிகள், முதுகலை பட்டம் பெற்றோர் கூட தூய்மை பணியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் நிலை உள்ளது. இந்நிலை தொடர்ந்தால் புலம்பெயர் தொழிலாளர்கள் இங்கு முதலாளிகளாகவும், இங்கிருப்பவர்கள் அவர்களுக்கு கீழே தொழிலாளிகளாகவும் வேலை பார்க்கும் நிலை உருவாகலாம்’’ என தெரிவித்தனர்.

Related Stories: