தொழில்நுட்ப பணிகள் காரணமாக தென் மாவட்ட ரயில்கள் தாமதம்

நெல்லை: இரட்டை ரயில் பாதைக்கான தொழில்நுட்ப பணிகள் காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து நேற்று புறப்பட்ட கன்னியாகுமரி, செந்தூர், பொதிகை உள்ளிட்ட ரயில்கள் மிகவும் தாமதமாக சென்னை செல்கின்றன. மதுரை திருமங்கலம் - துலுக்கபட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய இரட்டை ரயில் பாதையின் இணைப்பு பணிகள் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தது. ஏற்கனவே மின்னணு அடிப்படையில் ரயில் இயக்கம் நடைபெற்று வந்தது. தற்போது ரயில் இயக்கம் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.

கணினி மயம் ஆக்கும் பணியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை செல்லும் கொல்லம் எக்ஸ்பிரஸ், பொதிகை, கன்னியாகுமரி,  முத்துநகர், அனந்தபுரி, செந்தூர் உள்ளிட்ட சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் நாகர்கோவில் - பெங்களூர் சிறப்பு ரயில் ஆகியவை தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. இன்று காலை 8 மணி வரை இந்த ரயில்கள் அனைத்தும் மதுரையை சென்றடையவில்லை.

அதேபோல சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வரும்  கொல்லம், பொதிகை முத்துநகர் அனந்தபுரி, செந்தூர் சிறப்பு ரயில்கள் மற்றும் கோவை - நாகர்கோவில், பெங்களூர் - நாகர்கோவில், டெல்லி நிஜாமுதீன் - கன்னியாகுமரி சிறப்பு ரயில்கள் மிகவும் தாமதமாக தென் மாவட்டங்களுக்கு வருகின்றன. இன்று அதிகாலை 3 மணிக்கு பின்னரே ரயில்கள் இயக்கம் ஓரளவுக்கு சீரானது. இதனால் சென்னை மார்க்கமாக செல்லும் பயணிகளும், சென்னையில் இருந்து வரும் பயணிகளும் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.

Related Stories: