ஏலக்காய் டூத் பேஸ்ட்... துளசி டீ... மாதுளம்பழ சோப்

நன்றி குங்குமம் டாக்டர்

Advertising
Advertising

கவர் ஸ்டோரி

சந்தையை ஆக்கிரமிக்கும் புதிய மூலிகை கலாசாரம் நம்பலாமா?!

சமீபகாலமாக இயற்கையின் பக்கம் திரும்பியிருக்கிறது பொதுமக்களின் பார்வை. யோகா, தியானம், சித்த மருத்துவம், மூலிகை உணவுப்பொருட்கள், ஆயுர்வேதத் தயாரிப்புகளின் மீது திடீர் கவர்ச்சியும், நம்பிக்கையும் ஏற்பட்டு பலரும் அதன்பின்னால் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். பொதுமக்களின் இந்த மனவோட்டத்தை புரிந்துகொண்டு சுதாரித்திருக்கும் பல்வேறு வியாபார நிறுவனங்கள், அதனையே வியாபார உத்தியாகப் பயன்

படுத்தத் தொடங்கியிருக்கின்றன.

Natural, Organic, Herbal, Chemical free என்ற அலங்கார வார்த்தைகளை இப்போது எல்லாவற்றின் மீதும் பயன்படுத்தி விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். ஏலக்காய் டூத் பேஸ்ட், மாதுளம்பழ சோப், துளசி டீ என புதிய மூலிகை கலாசாரம் சந்தையை ஆக்கிரமித்திருக்கிறது. இது எந்த அளவுக்கு நம்பகத்தன்மையானது என்று துறை சார்ந்த நிபுணர்களிடம் பேசினோம்…

அழகு சாதனம் மற்றும் சருமப் பராமரிப்பு, உணவுப்பொருள் உற்பத்தியில் 100 சதவீதம் ஆர்கானிக் என்பது சாத்தியமே இல்லை என்கிறார் சருமம் மற்றும் அழகுக்கலை நிபுணரான நிதிசிங்.‘‘சர்வதேச அளவில் அழகு சாதன நுகர்வோர் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது இந்தியா.

இதற்குக் காரணம் ஆர்கானிக் மீது இந்திய மக்களுக்கு ஏற்பட்டுள்ள மாயைதான். சமீபகாலமாக அதீத வளர்ச்சி அடைந்துவரும் தொழிலாக மாறிவரும் ஆர்கானிக் பிராண்டுகளின் வளர்ச்சி, ஏற்கனவே இருக்கும் சாதாரண பிராண்டுகளின் நம்பகத்தன்மையைப் பின் தள்ளி இருப்பது உண்மை.

Natural என்று குறிப்பிடப்படுவனவற்றில் சேர்க்கப்படும் இயற்கைப் பொருட்கள் பற்றிய விவரங்களை லேபிள் மீது குறிப்பிட்டிருந்தாலும், அவை உண்மையில் சேர்க்கப்பட்டுள்ளனவா என்பதை கண்டுபிடிப்பது கடினம். நிலைமை இப்படி இருக்கையில், மருத்துவ நிபுணர்களின் அறிவுரையின்றியும் நிறுவனத்தின் விளம்பரங்களை நம்பியும் கடைகளில் நேரிடையாக வாங்கி உபயோகப்படுத்துகிறார்கள்.

இயற்கையான பொருட்களில் நறுமணத்திற்காகவும், பசைத்தன்மைக்காகவும் வேதிப்பொருட்கள் கலப்பதால் அது மிகவும் சென்ஸிட்டிவான சருமம் உள்ளவர்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தக்கூடும். இவற்றில் சில ஃபேர்னஸ் க்ரீம்களில் ஸ்டீராய்டு கலந்திருப்பதால் சருமத்தில் வெடிப்புகள் ஏற்பட்டாலும் தொடர்ந்து பல வருடங்களாக உபயோகித்துவிட்டு நிலைமை மிக மோசமான பின்பு எங்களிடம் வருகிறார்கள்.

ஒவ்வொருவரின் சருமத்தின் தன்மையும் வேறுபட்டிருக்கும். எனவே, அவரவரது சருமத்தின் தன்மைக்கேற்றவாறு மருத்துவர் பரிந்துரைப்பவற்றை உபயோகப்படுத்த வேண்டும்.

ஹேர் டை உபயோகிப்பவர்கள் ‘அம்மோனியா’ கலந்திருந்தால், அது தங்களுக்கு அலர்ஜி சோதனையை செய்த பிறகே உபயோகிக்க வேண்டும். சில பிராண்டுகளில் ‘ப்ளாக் ஹென்னா’ என்று குறிப்பிடடு விற்கிறார்கள். அதில் இயற்கையான மருதாணி சேர்ப்பதில்லை. முடி கருப்பாக வேண்டும் என்பதற்காக ரசாயனம் கலந்திருப்பார்கள்.

இதேபோல் கோன் மருதாணி வாங்கி கைகளில் இட்டுக் கொள்கிறார்கள். அதிலும் நிறத்தை அதிகரிக்க வேதிப்பொருட்கள் கலப்பதால் அலர்ஜி உண்டாகிறது. அதைத்தவிர்க்க இயற்கையான மருதாணி இலைகளை அரைத்து இட்டுக் கொள்ளலாம். தலைக்கும் மருதாணி போன்ற இயற்கைப் பொருட்களைக் கொண்டு நிறமேற்றிக் கொள்ளலாம்.

தற்போது முகத்தை இறுகப்பிடிக்கும் ஃபேஸ் மாஸ்க்குகள் மற்றும் முகத்தை சுத்தம் செய்ய ஸ்க்ரப்பர்களின் உபயோகம் அதிகமாகியிருக்கிறது. இது சருமத்துக்கு அதிகப்படியான அழுத்தத்தைக் கொடுக்கும். இயற்கைப் பொருட்களாலாகவே தயார் ஆனாலும் நீண்ட நாள் பாதுகாப்பிற்காக ரசாயனப் பதப்படுத்திகளைத்தான் (Preservatives) கலந்திருப்பார்கள்.

அதற்கு பதில், வீட்டிலேயே இருக்கும் பப்பாளி, வாழைப்பழம், தக்காளி, வெள்ளரி போன்றவற்றால் முகத்திற்கு மாஸ்க் போட்டுக் கொள்ளலாம். பால், மஞ்சள், தேன் மற்றும் பாதாம் கலந்த பேஸ்ட்டை ஸ்க்ரப்பராக முகத்தில் அப்ளை செய்து 5 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் முகத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கி, முகம் பளிச்சென்று வெண்மையாகிவிடும். விளம்பரங்களை நம்பி ஒரு பொருளை வாங்காமல், விழிப்புணர்வுடன் சரியான பொருட்களை தேர்ந்தெடுப்பது மக்களின் கையில் இருக்கிறது” என்று அறிவுறுத்துகிறார். 

ஆயுர்வேத மருத்துவர் சுமிதாவிடம் இதுபற்றி கேட்டோம்…‘‘அழகு சாதனப்பொருட்கள் மற்றும் சரும பராமரிப்பு பொருட்கள், துகள் வடிவிலோ, எண்ணெய் வடிவிலோ இருக்குமானால் முழுவதும் இயற்கை மூலப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், க்ரீம் வடிவில் இருக்கும் பொருட்களை தயாரிக்க, அவற்றோடு கண்டிப்பாக சில ரசாயனங்களை கூடுதலாக சேர்க்காமல் பசைத்தன்மையை கொண்டுவர முடியாது.

 

இது ஷாம்பூ, ஃபேஸ் வாஷ் போன்ற எல்லாவற்றிற்கும் பொருந்தும். ஆயுர்வேத மருத்துவத்தில் இயற்கை மூலப்பொருட்கள் கலக்கப்பட்ட குளியல் பொடி, ஹேர் ஆயில், தலைக்கு தேய்க்கும் பொடி போன்றவை துகள் வடிவிலோ, எண்ணெய் வடிவிலோ மட்டுமே தயாரிக்கப்படுகிறது. அதனால் எவ்வித பயமும் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொடர்ந்து உபயோகிக்கலாம்.

அதேபோல பழங்களாலான சோப்பு, ஷாம்பூ என்று சொல்கிறார்கள். அதில் எங்கிருந்து நுரை வருகிறது என்பதை மக்கள் யோசிக்க வேண்டும். நுரைக்காகவும், க்ரீம்களை பூசும்போது எண்ணெய்ப்பசை வெளியே தெரியாமல் இருக்கவும் சில வேதிப்பொருட்களை சேர்த்தாக வேண்டும். சில அழகுசாதனப்பொருட்களில் தேங்காய் எண்ணெய், பழங்கள், பூக்கள், இலைகள் போன்றவற்றை கூட்டுப்பொருளாக வேண்டுமானால் சேர்க்க முடியுமே தவிர, முழுவதுமாக இவற்றைக்கொண்டு தயாரிக்க முடியாது.

இந்த இயற்கைப் பொருட்களின் சேர்க்கையால் சற்றே கூடுதலான பலனைப் பெறலாம் அவ்வளவே. ஃபேர்னஸ் க்ரீம், ஆன்ட்டி ஏஜிங் க்ரீம் போன்றவற்றை தொடர்ந்து பலவருடங்களாக உபயோகிப்பவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தொடக்கத்தில் வித்தியாசமாக உணர்ந்தாலும் போகப்போக சருமம் வறட்சி அடைந்து தோலின் மேல்பகுதியில் வெடிப்புகள் தோன்ற ஆரம்பித்துவிடும்.

இப்போது பெண்களிடையே இரவு முழுவதும் முகத்தில் க்ரீம் தடவிக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது. நீண்ட நேரம் தோலின் துளைகள் அடைக்கப்படுவதால் சுவாசிக்க முடியாமல் தோலின் இயற்கையான ஈரப்பதம் குறைந்தவிடுகிறது” என்றவர் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் அழகு சாதனப் பொருட்களைப் பற்றி விவரிக்கிறார்...

“ஆயுர்வேத மருத்துவத்தில் சருமம் பொலிவடைய, பருக்கள் மற்றும் பருக்களின் தழும்புகளைப் போக்கக்கூடிய எண்ணெய் வகைகள், ஸ்நானப் பொடிகள் இருக்கின்றன. குளியல்பொடியில் அனைத்தும் இயற்கைப் பொருட்கள் சேர்க்கப்படுவதால், வியர்வை துர்நாற்றம் நீங்கி நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு இருக்க முடியும்.

தேங்காய் எண்ணெயோடு மஞ்சள், குங்குமப்பூ மற்றும் பல இயற்கைப் பொருட்களைச் சேர்த்து தயாரிக்கப்படும் குங்குமாதித் தைலத்தை உபயோகிப்பதால் முகத்தில் ஏற்படும் பருக்கள் மற்றும் பருக்களால் ஏற்படும் கரும்புள்ளிகள் மறையும்.

வெயிலால் ஏற்படும் கருமை நீங்கவும், சருமம் நல்ல வெள்ளை நிறத்தை பெறவும். இந்த தைலத்தைத் தடவி ஊறவைத்த பின்பு, குளியல் பொடியை தேய்த்து குளிக்க வேண்டும். குங்குமாதித் தைலத்தை தொடர்ந்து உபயோகித்து வந்தால் சருமம் மிருதுவாகி பளபளப்பாகும். குழந்தைகளுக்கு தினமும் குங்குமாதித்தைலத்தை தேய்த்து குளிக்க வைப்பதால் நல்ல நிற மாற்றம் கிடைக்கும்.

வெளியில் செல்லும் போது தூசி, அழுக்கு படிவதால் முகத்தில் ஏற்படும் கருந்திட்டுகளைப் போக்கவும், அடா்த்தியான மேக்கப் போடும் நாட்களிலும் இந்த தைலத்தை தடவிக் கொள்வதால் சருமம் பாதிப்படையாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்” என்கிறார்.

அரசு மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் பாஸ்கரன் இதுபற்றி தன்னுடைய கருத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.“ஆரோக்கிய கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, ஆர்கானிக் உணவுப்பொருட்கள் அவசியமானது, வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் அழகு சாதனப்பொருட்கள், சருமப் பராமரிப்புப் பொருட்களில் இயற்கை மூலப்பொருட்களால் ஆனது என்று சொல்வதை ஏற்றுக் கொள்வது சற்று சிரமமானது.

ஏனெனில், இந்தப் பொருட்களின் தர சோதனையில், நிறம், வாசனை, pH மதிப்பு, இலகுத்தன்மை, ஓட்டம் போன்ற அடிப்படை சோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே FDA தரமதிப்பு வழங்குகிறார்கள்.

இயற்கை மூலப்பொருட்களால் ஆன அழகுசாதனப் பொருட்களின் தரத்தை ஒழுங்குபடுத்தும் செயல்முறையை இன்னும் அரசாங்கம் நடைமுறைப்படுத்தாத்தை, நிறுவனங்கள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இயற்கைத் தயாரிப்புகளை சோதிப்பதில் பல்வேறு அளவீடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. உதாரணத்திற்கு ஒரு தயாரிப்பில் அதன் மூலப்பொருள் எந்த இடத்தில் எந்த சீதோஷ்ண நிலையில், எந்த நேரத்தில், எவ்வளவு கால இடைவெளியில் விளைவிக்கப்பட்டது என்பதற்கான அளவீடுகளை கணக்கிட வேண்டும்.

அழகு சாதனப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் என எதுவாக இருந்தாலும் அதன் நம்பகத்தன்மையானது அந்த நிறுவனம் நிர்ணயம் செய்யும் Standard Operating System என்பதைப் பொறுத்து இருக்கிறது. பயன்பாட்டுத் தேவை அதிகரிக்கும்போது, அங்கே தரம் குறைய வாய்ப்பிருக்கிறது. பெரும்பாலும் எலுமிச்சை, வேப்பிலை மற்றும் பழங்களின் நறுமணத்தை பொருட்களில் கொண்டுவர அவற்றின் எசன்ஸை ஒரு துளி ஊற்றினாலே போதும்.

 மேலும், தயாரிப்பில் எந்த அளவிற்கு மூலப்பொருள் செறிவூட்டப்படுகிறது என்பதைப் பொறுத்தும் அப்பொருளின் தரம் அடங்கியிருக்கிறது.100 சதவீதம் இயற்கையான மூலப்பொருட்கள் கொண்டு ஒரு பொருளைத் தயாரிக்க அந்த நிறுவனம் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். அந்தப் பொருளை பயன்படுத்துவதற்கு முன் எப்படி சாத்தியமாகும் என்பதை மக்கள்தான் சிந்திக்க வேண்டும்” என்கிறார்.

இந்திய நுகர்வோர் அமைப்பின் தொடர்பு அலுவலர் சோமசுந்தரம் இதுபற்றி தன்னுடைய பார்வையை முன் வைக்கிறார். “உயிர்வாழ அத்தியாவசியமான உணவுப்பொருட்களையே இயற்கையாக உற்பத்தி செய்ய முடியாத சூழலில்தான் இன்று இருக்கிறோம்.

முதலில், மண்ணை தரசோதனை செய்து பார்த்து, மண் பட்டுப்போயிருந்தால், அந்த நிலத்தை, இயற்கைப் பொருட்களை விளைவிப்பதற்கேற்றவாறு இயற்கை உரங்களைப் போட்டு பதப்படுத்த வேண்டும். அடுத்து இயற்கை விதையிலிருந்து உற்பத்தி செய்திருக்க வேண்டும். அப்போதுதான் முழுமையான இயற்கை மூலப்பொருள் சாத்தியம்.

முழுவதும் இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு அழகு சாதனப் பொருட்களையோ சருமப் பராமரிப்பு பொருட்களையோ தயாரிப்பது உற்பத்தி செலவை அதிகரிக்கும் எனும்போது எப்படி சாத்தியமாகும்? வழக்கமாக செய்யும் pH லெவல் போன்ற, அடிப்படை சோதனைகளையும், தாங்கள் நிர்ணயித்துள்ள தரநிலையையும், அந்தந்த நிறுவனத்தில் இருக்கும் சோதனைக்கூடங்களிலேயே செய்து கொள்கின்றனர்.

தற்போதைக்கு ஆர்கானிக் என்பதைக் குறிக்கும் சின்னம் (Emblem) போன்ற ஒன்றை மட்டும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) கொடுத்துள்ளது. மற்றபடி எந்தவிதமான நம்பகத்தன்மையோ, ஆர்கானிக் என்பதை உறுதிசெய்யும் சோதனை முறைகளோ, சோதனை செய்வதற்கேற்ற உள்கட்டமைப்பு வசதிகளோ அரசாங்க தரப்பில் ஏற்படுத்தப்படவில்லை.

ரசாயனக் கலப்பில்லாத, இயற்கையான என்று சொல்வதெல்லாம் கண்டிப்பாக விளம்பர உத்திகள் என்று உறுதியாகச் சொல்லலாம்” என்றவர் “பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் புதிய நுகர்வோர் சட்டம் 2018 ன்படி அதற்கான அதிகார மையம் ஒன்றை ஏற்படுத்த இருக்கிறார்கள்.

அந்தமையம் செயல்பாட்டிற்கு வரும்போது இதுபோன்ற தவறான தகவல்களை அளிக்கும் விளம்பரதாரர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கக்கூடிய சட்ட விதிகளையும் கொண்டுவர இருக்கிறார்கள்” என்ற கூடுதல் தகவலையும் தெரிவிக்கிறார்.

- உஷா நாராயணன்

Related Stories: