68 ஆண்டுகளுக்கு பின் மார்ச் மாதத்தில் சென்னையில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது: 3ம் தேதி வரை அதிகரிக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக சென்னையில் 68 ஆண்டுகள் இல்லாத வகையில் நேற்று 106 டிகிரி வெயில் கொளுத்தியது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதத்துடன் முடிந்த வடகிழக்கு பருவமழைக்கு பிறகு, தொடர்ந்து வெயில் நீடித்து வருகிறது. சராசரியாக 90 டிகிரி முதல் 100 டிகிரி வரை இருந்தது. பிப்ரவரி மாதத்தின் 2வது வாரத்தில் இருந்து வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. குறிப்பாக, பசிபிக் கடல் பகுதியில் நிலவும் எல்நினோ என்னும் கடல் மட்ட வெப்பம் காரணமாக வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய கடல் பகுதிகளில் வெப்பக் காற்று வீசி வருகிறது. கடலில் இருந்து வீசும் காற்றில் ஈரப்பதம் குறைந்து போனதால், தரைப் பகுதியை நோக்கி வீசும் காற்றும் வெப்பமாக உள்ளது. இந்த வறண்ட வானிலை காரணமாகவும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரை 101 டிகிரி வரை இருந்த வெயிலின் தாக்கம் நேற்று மேலும் அதிகரித்து 106 டிகிரிக்கு எகிறியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 106.34 டிகிரி வெயில் கொளுத்தியது.

சென்னையில் கடந்த  1953ம் ஆண்டு மார்ச் 29ம்தேதி 105 டிகிரி வெப்பம் நிலவியது. 68 ஆண்டுக்கு பின் மார்ச் மாதத்தில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு 106 டிகிரியை வெயில் தாண்டியுள்ளது. திருவள்ளூர், வேலூர், திருச்சி, மதுரை மாவட்டங்களிலும்  106 டிகிரி வெயில் கொளுத்தியது. கரூர் மாவட்டத்தில் 104 டிகிரியும் பிற மாவட்டங்களில் 101 டிகிரி வரையும் வெயில் அடித்தது. வரும் ஏப்ரல் 3ம் தேதி வரை வறண்ட வானிலை தமிழகம், புதுச்சேரியில் நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பெரும்பாலும் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 2ம் தேதி முதல் வட மேற்கு திசையில் இருந்து தமிழக பகுதியை நோக்கி தரைக்காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இயல்பைவிட கூடுதலாக 2 அல்லது 3 டிகிரி வெயில் அதிகரிக்கும். நேற்று வெயில் 106 டிகிரி கொளுத்தியதால், மதிய நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கினர். அனல் மற்றும் புழுக்கம் காரணமாக முதியோர், நோயாளிகள் மற்றும் குழந்தைகள் கடும் அவதிப்பட்டனர். இதற்கிடையே, தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதயில் தற்போது நிலவும் வளிமண்டல சுழற்சி மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தெற்கு அந்தமான் பகுதியில் மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: