புதுவை தேர்தலில் புதுமை என்னவென்றால் முதல்வராக இருந்தவருக்கே சீட் இல்லை: காங்., மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது: பிரதமர் மோடி தாக்கு.!!!

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வராக இருந்தவருக்கே காங்கிரஸ் கட்சி தேர்தலில் சீட் வழங்கப்படவில்லை என  பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ் 16,  அதிமுக 5, பாஜக 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதனிடையே பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ஏஎப்டி மில் திடலில் நடைபெற்ற  பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று தாமரை, ஜக்கு, இரட்டை இலை சின்னங்களுக்கு ஆதரவு திரட்டினார்.

பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, புதுச்சேரியில் உள்ள ஈர்ப்பு சக்தி என்னை மீண்டும் மீண்டும் இந்த நகருக்கு வர தூண்டுகிறது. பல ஆண்டுகளாக செயல்படாத காங்கிரஸ் மாநில அரசுகளில் முக்கியமான இடம் புதுச்சேரிக்கு  உண்டு. காங்கிரஸ் அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. கல்வி, பட்டியலின மக்களுக்கான இடங்களை ஒதுக்குவது உள்ளிட்ட எல்லா துறைகளிலும் புதுச்சேரியில் ஊழல் மிகுந்துள்ளது. ஊழல் செய்ததாக காங்கிரஸ் எம்எல்ஏக்களே  புகார் கூறியுள்ளனர்.

முந்தைய புதுச்சேரி காங்கிரஸ் அரசு எல்லா துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது. புதுச்சேரியில் செயல்படாத மக்கள் விரோத அரசாக காங்கிரஸ் அரசு இருந்தது. புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு ஊழலில் திழைத்த அரசாக இருந்தது. கல்வி,  வேலை வாய்ப்புத்துறை பாதாளத்திற்கு சென்றுவிட்டது. ஆட்சியின் சாதனை அறிக்கையை காங்கிரஸ் கட்சியால் வெளியிட முடியவில்லை. இதுவரை சந்தித்த தேர்தல்களிலேயே புதுச்சேரி தேர்தல் புதுமையானது, ஏனென்றால் இந்த  மாநிலத்தின் முதல்வருக்கே இப்போது தேர்தலில் சீட் வழங்கப்படவில்லை, மோசமான ஆட்சியை கொடுத்ததால் தான் அவருக்கே சீட் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

புதுச்சேரி பொருளாதார ரீதியாக மிகப்பெரிய வளர்ச்சி அடைய உள்ளது. புதுச்சேரியை சிறந்த மாநிலமாக மாற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பாடுபடும். மருத்துவம், தொழில்நுட்ப கல்வியை தாய் மொழியிலேயே கற்பிக்க அரசு நடவடிக்கை  மேற்கொண்டுள்ளது என்றும் பிரதமர் மோடி கூறினார்.

Related Stories: