குறிப்பிட்ட சில தொகுதியில் பணம் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக புகார் வந்தால் தேர்தல் ரத்து செய்யப்படுமா? தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் சில குறிப்பிட்ட தொகுதிகளில் அதிகமான பணம் நடமாட்டம் குறித்து சிறப்பு தேர்தல் செலவின பார்வையாளர்கள் அளிக்கும் புகார் அடிப்படையில் தேர்தலை நடத்துவதா, ரத்து செய்வதா என்பது குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவு எடுக்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளது. 88,937 வாக்குப்பதிவு மையங்களில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும். இதற்காக 1,55,105 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரமும், 1,14,205 கட்டுப்பாட்டு இயந்திரமும், 1,20,807 விவிபேட் இயந்திரமும் தயார் நிலையில் உள்ளது. இதுதவிர, 30 சதவீதம் இயந்திரங்கள் கூடுதலாக வைக்கப்பட்டு இருக்கும்.

தமிழகத்தில் 80 வயது மற்றும் 80 வயதை கடந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டுபோட 12டி விண்ணப்பம் அளித்தவர்களிடம், அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் டீம் அமைத்து வீடு வீடாக தபால் வாக்குகளை சேகரித்து வருகிறார்கள். இதுபற்றிய முழு விவரம் அரசியல் கட்சிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணி ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெறும். இதை தவிர்த்து, தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் தபால் ஓட்டு போட 12 மற்றும் 12ஏ விண்ணப்பம் பெற்றுள்ளனர். இதுவரை 1,85,057 விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது. 1,45,667 பேருக்கு இன்னும் தபால் ஓட்டுக்கான விண்ணப்பம் வழங்கப்படவில்லை.

இதுவரை 89,185 பேர் தபால் ஓட்டு போட்டுள்ளனர். தமிழகத்தில் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் 537 எனவும், பதற்றமான வாக்குச்சாவடிகள் 10,813 என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இதுவரை ஆதாரம் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.324.27 கோடி பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் பணமாக மட்டும் ரூ.147.24 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக சேலத்தில் ரூ.40.47 கோடியும், சென்னையில் ரூ.18.75 கோடியும், செங்கல்பட்டில் ரூ.10.04 கோடியும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு சோதனையில் ரூ.60.58 கோடி பணம் பறிமுதல் செய்துள்ளனர்.

திருச்சியில் ரூ.1 கோடி கைப்பற்றப்பட்ட சம்பவம் மற்றும் கோவையில் நடந்த சம்பவங்களை தேர்தல் சிறப்பு செலவின பார்வையாளர்கள், போலீஸ் பார்வையாளர், பொது பார்வையாளர் இந்திய தேர்தல் அதிகாரிக்கு கொடுத்த ரிப்போர்ட் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் விவகாரம் குறித்து எந்த அரசியல் கட்சியினர் தகவல் கொடுத்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு தொகுதியில் அதிகமாக பணம் நடமாட்டம் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு சிறப்பு தேர்தல் பார்வையாளர்கள் அளிக்கும் ரிப்போர்ட் அடிப்படையில் தேர்தலை நடத்துவதா, ரத்து செய்வதா என்பது குறித்த நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம்தான் எடுக்கும். தனிநபர் விமர்சனம் குறித்து அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள். அதில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டு இருந்தால் அவர்கள் மீது வழக்கு தொடருவார்கள். இந்த வழக்கு விவரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள்தான் தனிநபர் விமர்சனம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* அரசியல் கட்சிகள் சார்பாக பூத் சிலிப் கொடுக்க கூடாது

தமிழகம் முழுவதும் இருந்து சிவிஜில் அப் மூலம் 3,464 புகார்கள் தேர்தல் ஆணையத்துக்கு வந்துள்ளது. இதில் 2,580 புகார் உண்மையானது என தெரிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்துக்காக 15,497 வாகனங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 11,186 குற்றவாளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். அனுமதியுடன் வைத்திருந்த 18,753 துப்பாக்கிகள் போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிவிஜில் மூலம் அதிகபட்சமாக கரூரில் இருந்து 671, கோவையில் இருந்து 593, கன்னியாகுமரி 238, சென்னை 193 புகார்கள் வந்துள்ளது. ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் வீடு தேடி வாக்காளர் சிலிப் கொடுக்கும் பணியை நேற்று முதல் தேர்தல் அதிகாரிகள் தொடங்கி விட்டனர். அந்த சிலிப்பில் வாக்காளர் பெயர், எப்பிக் நம்பர், எந்த தெருவில் உள்ள பள்ளியில் வாக்களிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம்பெறும். அரசியல் கட்சிகள் சார்பில் வாக்காளர் சிலிப் கொடுக்க அனுமதி இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

Related Stories: